ஆதிவாசி மக்கள் மதுகுடிக்கும் பழக்கத்தை அடியோடு கைவிட வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


ஆதிவாசி மக்கள் மதுகுடிக்கும் பழக்கத்தை அடியோடு கைவிட வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 30 Jan 2017 11:06 PM GMT (Updated: 2017-01-31T04:36:58+05:30)

ஆதிவாசி மக்கள் மதுகுடிக்கும் பழக்கத்தை அடியோடு கைவிட்டு தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா அறிவுரை வழங்கினார்.

மருத்துவ முகாம்

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ரெட் கிராஸ் மற்றும் தேவாலா போலீசார் இணைந்து பழங்குடியின மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள ஆதிவாசி கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. வருவாய், காவல், வனம் உள்ளிட்ட அனைத்து துறையினர் ஆய்வு செய்து வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியின மக்கள் மருத்துவ உதவிகள் பெறுவதற்காக அந்தந்த பகுதியில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மதுகுடிக்கும் பழக்கம்

எனவே ஆதிவாசி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மதுகுடிக்கும் பழக்கத்தை ஆதிவாசி மக்கள் அடியோடு கைவிட வேண்டும். மேலும் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்த்து நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தைகளின் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். ஆதிவாசி மக்கள் தங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் போலீசாரை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

500 ஆதிவாசி மக்கள் பயன்பெற்றனர்

பின்னர் மருத்துவ முகாம் தொடங்கியது. முகாமில் டாக்டர் சதீஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 500 ஆதிவாசி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கை, கால், மூட்டு வலி, எலும்பு முறிவு உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் மீனாட்சி சுந்தரம், ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் மணி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சக்திவேல், ஸ்ரீனிவாசலு, இன்ஸ்பெக்டர்கள் ஞானரவி, லோகநாதன், ராஜூ உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story