வட்ட வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு முதியோர்கள் போராட்டம்


வட்ட வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு முதியோர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2017 12:03 AM GMT (Updated: 2017-01-31T05:33:36+05:30)

அரிசி வினியோகத்தை நிறுத்தியதால், உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு முதியோர்கள் போராட்டம் நடத்தினர்.

ரே‌ஷன் அரிசி வினியோகம்

உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம், கூடலூர், சின்னமனூர் ஆகிய 3 நகராட்சிகள், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகள், ராயப்பன்பட்டி, முத்துலாபுரம், தம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்பட 32 ஊராட்சிகள் உள்ளன.

இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர்கள், முதிர்கன்னிகள், விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள ரே‌ஷன்கடைகளில் தலா 5 கிலோ ரே‌ஷன் அரிசி இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்குரிய அரிசியை வாங்குவதற்காக முதியோர்கள் ரே‌ஷன்கடைகளுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. மேலும் இனிமேல் ரே‌ஷன்கடையில் அரிசி வினியோகம் செய்யப்பட மாட்டாது என்றும், அரிசி வேண்டுமென்றால் உத்தமபாளையத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்லுமாறும் விற்பனையாளர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முதியோர் சுமார் 100–க்கும் மேற்பட்டோர், வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள், திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு மாதந்தோறும் வழங்கவேண்டிய அரிசியை நிறுத்தியதற்கான காரணம் கேட்டு கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விற்பனையாளர் மீது நடவடிக்கை

இதைத்தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி கண்ணன், முதியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமரசம் அடைந்து அங்கிருந்து முதியோர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி கண்ணன் கூறும்போது, ரே‌ஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைக்காமல் விட்டதால் தான் அரிசி வழங்கவில்லை. எனவே உடனடியாக ஆதார் அட்டை நகல்களை முதியோர்கள் கொடுக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைத்த முதியோர்களுக்கு, உடனடியாக அரிசி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி முதியோர்களை அலைக்கழித்தால் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story