கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல்: குமாரசாமியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் மந்திரி பரமேஸ்வர் பேட்டி


கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல்: குமாரசாமியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-04T01:09:28+05:30)

கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் வரும் என்று குமாரசாமி கூறி உள்ளார். அவர் கூறிய கருத்துக்கு அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என்று மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.

சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் வரும் என்று குமாரசாமி கூறி உள்ளார். அவர் கூறிய கருத்துக்கு அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என்று மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.

மாதாந்திர கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கர்நாடக மாநில போலீஸ் மந்திரியும், சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான பரமேஸ்வர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கலெக்டர் சத்தியவதி, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ராகபிரியா, போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் சி.டி.ரவி(சிக்கமகளூரு), நிங்கய்யா(மூடிகெரே), ஜீவராஜ்(சிருங்கேரி), சீனிவாஸ்(தரிகெரே), தத்தா(கடூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வறட்சி பணிகளை மேற்கொள்வது, குடிநீர் வசதி இல்லாத பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து கொடுப்பது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டம் முடிந்த பின் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரின் விலகல் முடிவு கட்சியில் உள்ள அனைவருக்கும் மிகுந்த வேதனையை தருகிறது. எஸ்.எம்.கிருஷ்ணாவின் முடிவை மாற்ற அவரிடம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் இதுவரை கட்சியில் இணைவது குறித்து சரியான பதில் அளிக்கவில்லை. இருந்தாலும் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப் படும்.

குமாரசாமியிடம் தான் கேட்க வேண்டும்

2017-ம் ஆண்டு முடிவதற்குள் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று குமாரசாமி கூறியுள்ளார். அவர் எதனை மனதில் வைத்து கொண்டு அப்படி கூறினார் என்பது தெரியவில்லை. அவர் கூறிய கருத்துக்கு அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.

ஜனார்த்தன பூஜாரி என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று கூறியது பற்றி கேட்கிறீர்கள். என்னை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்பது அவரின் கருத்து. அதற்கு நான் ஏதுவும் பதில் கூற முடியாது. உகாண்டா நாட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை வந்த பிறகே உகாண்டா நாட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டது பற்றி உண்மை நிலவரம் தெரியவரும்.

மானம், மரியாதை


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. விஸ்வநாத் எனக்கு மானம், மரியாதை இல்லை என்று கூறியுள்ளார். முதலில் அவருக்கு மானம், மரியாதை இருந்தால் சரி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story