பேராவூரணியில் பயங்கரம் பழைய இரும்பு பொருட்களை சேகரிக்க வந்தவர் அடித்துக்கொலை காவலாளி கைது


பேராவூரணியில் பயங்கரம் பழைய இரும்பு பொருட்களை சேகரிக்க வந்தவர் அடித்துக்கொலை காவலாளி கைது
x
தினத்தந்தி 3 Feb 2017 8:05 PM GMT (Updated: 2017-02-04T01:35:33+05:30)

பேராவூரணியில் பழைய இரும்பு பொருட்களை சேகரிக்க வந்தவர் அடித்துக்கொல்லப்பட்டார்.

பேராவூரணி,

வீடுகள் கட்டும் பணி

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது60). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பல இடங்களில் கூலி வேலை செய்து வந்தார். பேராவூரணி பஸ் நிலையத்தின் பின்புறம் புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீடுகளுக்கு காவல் காக்கும் பணியில் மாரிமுத்து ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரிமுத்து காவல்பணியில் இருந்த வீடுகளுக்கு அருகில் தெருவில் கிடந்த பழைய இரும்பு பொருட்களை சேகரிக்க சிவகங்கை மாவட்டம் கோவிலூர் பகுதியை சேர்ந்த ராஜா(58) என்பவர் வந்தார்.

கைது

இவரை திருடன் என நினைத்த மாரிமுத்து, ராஜாவிடம் விசாரித்தார். அப்போது ராஜாவுக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராஜா மாரிமுத்துவை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராஜாவின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் ராஜாவின் உடலை இழுத்து போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். நேற்று காலை கட்டிட பணிகளுக்கு வந்தவர்கள் ராஜாவின் பிணத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாரிமுத்துவை தேடி வந்தனர். இந்தநிலையில் பெருமகளூர் அருகே வயல்பகுதியில் மாரிமுத்து மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் வயல்பகுதியில் மறைந்திருந்த மாரிமுத்துவை கைது செய்தனர்.


Next Story