சிறுமியை கர்ப்பமாக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை


சிறுமியை கர்ப்பமாக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 3 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-04T01:39:25+05:30)

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

கோவை,

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

16 வயது சிறுமி கர்ப்பம்

கோவையை அடுத்த பேரூர் செட்டிபாளையம் ராமசாமி நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). இவர் அந்தப்பகுதியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது ராஜசேகர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்தார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். உடனே அவர் தான் கர்ப்பம் அடைந்ததை ராஜசேகரிடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு ராஜசேகர், நீ கர்ப்பமானதற்கு நான் காரணம் இல்லை என்று கூறியதுடன், அவரை திருமணம் செய்யவும் மறுத்துவிட்டார்.

நகைப்பட்டறை உரிமையாளர் கைது

இதுகுறித்து கடந்த 30–12–2013–ம் ஆண்டு அந்த சிறுமி கோவை மாநகர மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக போலீசார் ராஜசேகரிடம் விசாரணை நடத்தியதில், அந்த சிறுமியின் கர்ப்பத்துக்கு தான் காரணம் இல்லை என்றும், அந்த குழந்தை எனது குழந்தை இல்லை என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து ராஜசேகருக்கும் அந்த குழந்தைக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த குழந்தை ராஜசேகரின் குழந்தை என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீசார் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நகைப்பட்டறை உரிமையாளரான ராஜசேகரை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

பின்னர் இதுகுறித்து போலீசார் கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் சரோஜினி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிமொழி, குற்றம் சாட்டப்பட்ட ராஜசேகருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 லட்சத்தை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story