கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க கோரிக்கை


கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-14T03:34:24+05:30)

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நெல்லை மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்க (ஏ.ஐ.டி. யு.சி.) தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கட்டிட தொழிலாளர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் தரையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோரிக்கை மனு

பின்னர் கட்டிட தொழிலாளர்கள் கலெக்டர் கருணாகரனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கட்டுமான மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பணப்பலன் முழுமையாக கிடைக்கவில்லை. அனைத்து நலத்திட்ட உதவிகளும் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.350 வழங்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 60 வயதான அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.5 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி தொகை வழங்க வேண்டும். வேலை இல்லாத மாதங்களில் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பூங்கோதை எம்.எல்.ஏ.

பூங்கோதை எம்.எல்.ஏ. கலெக்டர் கருணாகரனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆலங்குளம் தொகுதியில் பல பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கிறது. அந்த பணிகள் தொய்வில்லாமல் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாரணபுரம் பிராமண குளத்திலும், புதுக்குளத்திலும் அமைக்கப்பட்டு வரும் தனியார் காற்றாலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். கடையம் சிவசைலம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சிறுத்தை புலி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது. அதனால் மலையடிவாரத்தில் மின்வேலி அமைக்க வேண்டும். ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ரூ.46 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் குடிநீருக்காக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

புதிய தமிழகம் கட்சி

நெல்லை மாநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் செல்லப்பா, கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரியில் சுதந்திர போராட்ட தலைவர்களின் படங்கள், எங்கள் கட்சியின் பெயர் பலகை, கொடி கம்பங்கள் உள்ளன. இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போது கங்கை கொண்டான் போலீசார் மேட்டு பிராஞ்சேரியில் இருக்கும் தலைவர்களின் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என அந்த ஊர் தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். அதே இடத்திலே கட்சியின் பெயர் பலகை மற்றும் கட்சி கொடி வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தாது மணல் தொழிற்சாலை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ராதாபுரம் தாலுகாவில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அந்த பகுதியில் தாதுமணல் தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வந்தனர். தற்போது அந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே மூடிய தாது மணல் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் ஊர் பொதுக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கங்கைகொண்டான் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் போலி ஆவணங்கள் கொடுத்து, தன்னுடைய மனைவிக்கு சாதி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆலங்குளம் அருகே உள்ள குத்தபாஞ்சான் பகுதியைச் சேர்ந்த பீடி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Next Story