மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் சாலைமறியல்


மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் சாலைமறியல்
x
தினத்தந்தி 18 Feb 2017 9:00 PM GMT (Updated: 18 Feb 2017 3:29 PM GMT)

மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் திருப்பத்தூரில் சாலைமறியல் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும், சபாநாயகர் தனபாலை கண்டித்தும், திருப்பத்தூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், தர்ணா போராட்டம், சசிகலா உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பஸ் நிலையம் அருகில் வாணியம்பாடி மெயின்ரோட்டில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர். மேலும் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும், சபாநாயகர் தனபாலை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம், சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், டி.ரகுநாத், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அன்பழகன், துணைச் செயலாளர்கள் செல்வம், அன்பு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எல்.கருணாநிதி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சபியுல்லா ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சாலைமறியலால் திருப்பத்தூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது.

அதேபோல் நாட்டறம்பள்ளியில் தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமையில், தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story