ராமநாதபுரம் அருகே 100 ஆண்டுகள் பழமையான பர்மா வெள்ளைக்கல் விநாயகர் சிலை கண்டுபிடிப்பு


ராமநாதபுரம் அருகே 100 ஆண்டுகள் பழமையான பர்மா வெள்ளைக்கல் விநாயகர் சிலை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 27 Feb 2017 1:19 PM GMT)

ராமநாதபுரம் அருகே 100 ஆண்டுகள் பழமையான பர்மா வெள்ளைக்கல் விநாயகர் சிலை உள்ள கோவில் அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ஆய்வு

ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ராஜகுரு, செயலாளர் காளிமுத்து, கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் ராமநாதபுரம் அருகே முதுகுளத்தூர் பகுதி கிராமக் கோவில்கள் பற்றிய களஆய்வின்போது, மேலக்கன்னிசேரி கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளைக்கல் விநாயகர் சிலையைக் கொண்டு கோவில் அமைத்து இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது பற்றி தொல்லியல் ஆய்வாளர்ராஜகுரு கூறியதாவது:–

விநாயகர் வழிபாடு பரவலாக உலகம் முழுவதும் பல நாடுகளில் காணப்படுகிறது. இந்தோனேசியா நாட்டின் நோட்டில் விநாயகர் உருவம் அச்சிடப்பட்டுஉள்ளது. பிற்கால சோழர் காலத்தில் விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவியதாக தெரிகிறது. பர்மாவில் விநாயகரை மகாபைனி என்கிறார்கள். இங்குள்ள புத்த சமயக் கோவில்களிலும் விநாயகர் சிலைகள் உள்ளன. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா மகாபைனி என்றே கொண்டாடப்படுகிறது.

பர்மா தொடர்பு

சங்ககாலம் முதல் தமிழர்கள் பர்மாவுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்த போதும், கி.பி.1800–களில் தான் அதிகஅளவில் தமிழ்நாட்டில் இருந்து கூலி வேலைக்காகவும் வணிகத்துக்காகவும் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டுஉள்ளனர். அதே காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பர்மாவின் ரங்கூன் (தற்போது யங்கூன்) பகுதிகளில் அதிக அளவில் குடியேறி உள்ளனர்.

குறிப்பாக முதுகுளத்தூர் அருகே மேலகன்னிசேரி என்ற ஊரை சேர்ந்தவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன் பர்மாவில் வணிகம் செய்ய சென்றுள்ளனர். பர்மாவில் இந்தபகுதி மக்கள் அதிகஅளவில் இருந்ததால் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆள்சேர்க்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பர்மா சென்றுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பர்மாவில் இருந்த பலர் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.

ராணுவ ஆட்சி

இந்த ஊரை சேர்ந்தவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை பர்மா சென்று வணிகம் செய்துவிட்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருவது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வாறு இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர்களும் தங்கள் இறுதி காலத்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். தற்போதும் இந்த ஊரைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் பர்மாவில் வசிக்கிறார்கள். அங்கு ராணுவ ஆட்சி ஏற்பட்டபோது இந்த ஊரை சேர்ந்த பலர், இந்தியா திரும்பி கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் குடியேறிஉள்ளனர்.

இங்கிருந்து வணிகம் செய்ய பர்மாவுக்குச் சென்ற பெருமாள் என்பவருடைய குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து திரும்பி வந்தபோது, வெள்ளை கல் விநாயகர் சிலையை கப்பலில் கொண்டு வந்துள்ளனர். பின்னர் கோவில் கட்டி இந்தசிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். நூறு ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் இன்றும் வழிபாடு தொடர்ந்து நடப்பதாக இந்த பகுதியினர் கூறுகிறார்கள்.

கடல் பயண துணை

தமிழர் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் காலத்தில் அவர்கள் வழித்துணையாக விநாயகர் உருவத்தை எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச்சென்ற விநாயகர் சிலைகளைக் கொண்டே அவர்கள் சென்ற நாடுகளில் கோவில் கட்டியுள்ளனர். தமிழர்களால் பர்மாவில் கி.பி.1860–ல் கட்டப்பட்ட முதல் கோவில் சித்தி விநாயகர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் பயணத்தின் போது வழித்துணையாக எடுத்து வரப்பட்டதாக இந்த வெள்ளை கல் விநாயகர் சிலையும் இருக்கலாம். சொந்த ஊருக்கு பத்திரமாக திரும்பியதும் இந்த சிலையை கொண்டு கோவில் கட்டியிருப்பதாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story