இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 27 Feb 2017 10:15 PM GMT (Updated: 28 Feb 2017 11:17 PM GMT)

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

முற்றுகை

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை விக்கிரவாண்டி தாலுகா கீழக்கொந்தை மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். திடீரென இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா

அப்போது அவர்கள் கலெக்டரிடம் கூறுகையில், நாங்கள் கீழக்கொந்தை பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கென்று சொந்தமாக வீட்டுமனை இல்லை.

எங்கள் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடத்தில் எங்களுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வழங்கும் தொகுப்பு வீடும் கிடைக்கவில்லை. எனவே தாங்கள் இதில் தலையிட்டு எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனை கேட்டறிந்த கலெக்டர் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story