மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மனு கொடுத்த பெண்கள்


மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மனு கொடுத்த பெண்கள்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T01:28:39+05:30)

மதுக்கடைகளை வேறுஇடத்துக்கு மாற்றக்கோரி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 278 பேர் மனு கொடுத்தனர்.

அப்போது திண்டுக்கல் அருகே ம.மு.கோவிலூர் பாறைப்பட்டியில் உள்ள மதுக்கடையை வேறுஇடத்துக்கு மாற்றக்கோரி பெண்கள் மனு கொடுக்க வந்தனர். இதற்காக அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து 4 பேர் மட்டும் செல்லும்படி கூறினர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுக்கடையை மாற்ற வேண்டும்

பின்னர் 4 பேர் சென்று கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுத்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி பெண்கள் கூறுகையில், பள்ளப்பட்டியில் உள்ள மதுக்கடையில் இளைஞர்கள் மட்டுமின்றி மாணவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். போதை ஆசாமிகளால் பல்வேறு தொல்லைகள் ஏற்படுகின்றன. பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மதுக்கடையை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும், என்றனர்.

அதேபோல் கொடைக்கானலை சேர்ந்த சுயஉதவிக்குழு பெண்கள் கொடுத்த மனுவில், கொடைக்கானல் பஸ்நிலையம், பெருமாள்மலை பஸ் நிறுத்தம், மூஞ்சிக்கல் ஆகிய 3 பகுதிகளிலும் மதுக்கடைகள் செயல்படுகின்றன. போதை ஆசாமிகள், பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களிடம் தகராறு செய்கின்றனர். பிளஸ்–2 தேர்வு நெருங்குவதால் டியூசன் செல்லும் மாணவிகள் இரவு பாதுகாப்பாக திரும்ப முடியவில்லை. மதுக்கடைகளால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே, 3 இடங்களில் செயல்படும் மதுக்கடைகளை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குடிநீர் பற்றாக்குறை

நிலக்கோட்டை தாலுகா பச்சமலையான்கோட்டை ஊராட்சி கேத்தயகவுண்டன்பட்டி கிராமமக்கள் குடிநீர் வசதி கேட்டு மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், எங்கள் ஊரில் 500 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் ஊரில் மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அதில் ஒரு நபருக்கு 4 குடம் மட்டுமே கிடைப்பதால், குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் விலைக்கு தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மற்றொரு ஊருக்காக, எங்கள் ஊரில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். அதில் இருந்து எங்கள் ஊருக்கும் குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.

திண்டுக்கல் பி.வி.தாஸ் காலனியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், பி.வி.தாஸ் காலனியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 120 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், எனக் கூறியிருந்தனர்.

தருமத்துப்பட்டியை அடுத்த போடம்பட்டி பூங்காநகர் மக்கள், சமுதாயக்கூடத்தில் இயங்கும் குழந்தைகள் மையத்தை மாற்றக்கோரி கோ‌ஷமிட்டபடி வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், குழந்தைகள் மைய கட்டிடம் சேதமாகி இருந்ததால், சமுதாயக்கூடத்துக்கு மாற்றப்பட்டது. ஊரில் நாங்கள் பணம் வசூலித்து கட்டிடத்தை சீரமைத்து உள்ளோம். எனவே, குழந்தைகள் மையத்தை மீண்டும் பழைய கட்டிடத்துக்கு மாற்றிவிட்டு, சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும், என கூறியிருந்தனர்.

நலத்திட்ட உதவிகள்

இந்த கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதவித்தொகையாக 15 பேருக்கு ரூ.7 லட்சத்து 70 ஆயிரம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றிபெற்ற 21 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக ரூ.32 ஆயிரம் ஆகியவற்றை கலெக்டர் டி.ஜி.வினய் வழங்கினார்.


Next Story