நீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி அணை 59 ஆண்டுகளாக தூர்வாரப்படாத அவலம்


நீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி அணை 59 ஆண்டுகளாக தூர்வாரப்படாத அவலம்
x
தினத்தந்தி 3 March 2017 10:30 PM GMT (Updated: 3 March 2017 8:24 PM GMT)

திருப்பூர், கரூர் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி அணை 59 ஆண்டுகளாக தூர்வாரப்படாத அவலம் 15 அடிகளுக்கு சகதிகள் நிரம்பியதால் நீர் இருப்பும் குறைகிறது

இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து வருகிறது விவசாயம். அந்த விவசாயத்திற்கு ஆணிவேராக இருப்பது பருவமழை. காலநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதும், பருவ மழை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதும் கவலை அளிப்பதாக உள்ளது. முன்னேற்றம் என்ற மாயவலையில் சிக்கி இயற்கை வளங்களை அழித்து, மேலை நாட்டு மோகத்தால் பண்பாட்டை நொறுக்கிவிட்டு, வளர்ச்சி என்று முழங்கி பசுமை போர்த்தியபோது பொன்விளையும் பூமியை கட்டிடங்காக மாற்றி விட்டதால் மழை குறைந்து விட்டது. பொன்விளையும் பூமியும் பாலைவனமாக மாறி வருகிறது. தற்போது தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக அனைத்து அணைகளிலும் போதிய நீர் இருப்பு இல்லாமல், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

அமராவதி அணை

திருப்பூர்–கரூர் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது அமராவதி அணை. கேரள மாநிலத்தில் மூணாறு மலைப்பகுதி மற்றும் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் ஆனைமலை வனப்பகுதியில் அமராவதி ஆறு உற்பத்தியாகிறது. இதனுடன் தேனாறு, சின்னாறு, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் கலந்து வரும் நிலையில், அதை தடுத்து மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கட்டப்பட்டதுதான் அமராவதி அணை.

1953–ம் ஆண்டு தமிழக முதல்–அமைச்சராக இருந்த ராஜாஜியால் அமராவதி அணை கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நட்டப்பட்டது. வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பால் 1958–ம் ஆண்டு அமராவதி அணை கட்டி முடிக்கப்பட்டது. அதிக அளவு எந்திரங்கள் பயன்பாடு இல்லாத அந்த கால கட்டத்தில் அணை கட்டும் பணியில் ஈடுபட்ட துணை பொறியாளர் பார்த்தசாரதி உள்பட பலர் இறந்து விட்டனர். அவர்களுக்கான நினைவு சின்னம் இன்றளவும் அணையில் நினைவு சின்னமாக உள்ளது.

பாசன பரப்பளவு

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 839 சதுர கிலோ மீட்டராகும். அணையில் 9.06 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணையின் மொத்த உயரம் 90 அடி. அணையில் இருந்து அமராவதி ஆறு, அமராவதி பிரதான கால்வாய், மற்றும் கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்கள் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 121 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதற்கென அமராவதி அணையில் 9 ‌ஷட்டர்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படுகிறது. அமராவதி ஆற்றின் மூலம் திறக்கப்படும் தண்ணீரானது குதிரையாறு, சண்முகநதி, நங்காஞ்சியாறு, கொடகனாறு ஆகிய உபநதிகளோடு கலக்கிறது. மேலும் நல்ல தங்காள் ஓடை, வட்டமலைக்கரை ஓடை, அடங்கரைஓடை, சித்தாறு மற்றும் உப்பாறு ஓடைக்கும் அமராவதி நதியுடன் இணைந்து 222 கிலோ தூரம் பயணம் செய்து கரூர்மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் திருமுக்கூடலூரில் காவிரியோடு கலக்கிறது.

நீர்வரத்து

அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக வரும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அமராவதி அணை 2 முறைக்கு மேல் நிரம்பும் வகையில் அணை வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய பாசன முறையின் கீழ் அமராவதி ஆற்றின் மூலம் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன்மாதம் 1–ந் தேதியில் இருந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதே போல் அமராவதி பிரதான கால்வாய் மூலம் புதிய பாசன முறையில் ஆகஸ்டு முதல் தேதியில் இருந்து ஜனவரி 31–ந்தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, தேவைக்கு ஏற்ப இந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டாலும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்ததால் அமராவதி அணையை சுற்றி உள்ள பகுதிகளில் நெல்விளையும் பூமியாக மட்டுமல்லாது கரும்பு உள்பட பல்வேறு பயிர்களின் மூலம் விவசாயிகளுக்கு பொன்விளையும் பூமியாக இருந்தது.

நெல்சாகுபடி

இந்த நிலையில் பொங்கிவரும் காட்டாறுகால் அடித்து வரப்படும் பாறைகள், மண் துகள்கள், படிப்படியாக படிந்து அணையின் நீர்த்தேக்க பரப்பளவு குறைய தொடங்கியது. தற்போதைய நிலையில் அணையின் மொத்த உயரமான 90 அடியில் சுமார் 15 அடி உயரத்திற்கு சகதி மற்றும் வண்டல் மண் தேங்கிக்கிடக்கிறது. மேலும் கற்களும், மண்குவியலும், அணை பகுதிகளில் மேடாகி உள்ளது. மழை காலங்களில் போதுமான தண்ணீரை தேக்கமுடியாத நிலையில் ஒரு போகம் நெல்சாகுபடி செய்வதே கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது அணையின் கரைகளால் பலப்படுத்துதல், ‌ஷட்டர்களை பழுதுபார்த்தல், சாலை, மின்விளக்கு வசதிகள் அமைத்தல், உள்ளிட்ட பணிகள் ரூ.6 கோடியே 2 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அணை தூர்வாரும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தற்போது வறட்சியின் பிடியில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் விவசாயிகள் வருங்காலத்திலாவது அணையை தூர்வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

தூர்வார கோரிக்கை

அமராவதி அணையை தூர்வாருவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பூர்வாங்க பணிகள் நடைபெற்று அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அணையின் உட்புறத்தில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களில் போடும்போது அதிக மகசூல் கிடைக்கும். எனவே தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. ஆனாலும் தூர்வாரும் பொழுது மிக அதிகஅளவிலான மண்ணை வெளியே எடுக்க வேண்டிய நிலை இருக்கும். அந்த மண்ணை சேமிப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை இந்த அணை ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் அணையின் நீர்த்தேக்க பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே அணையை விரைவில் தூர்வாரி தண்ணீரை அதிக அளவில் தேக்கி வைக்க அரசு முன்வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்பர் அமராவதி திட்டம்

அமராவதி அணைக்கு நீர்வரத்து தரும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய 3 ஆறுகளும் கூட்டாறு என்னுமிடத்தில் சந்தித்து அமராவதி ஆறாக உருமாறுகிறது. இந்த ஆறானது தூவானம் என்னுமிடத்தில் சுமார் 50 மீட்டர் உயரத்தில் இருந்து அருவிபோல் விழுகிறது. எனவே இந்த இடத்தில் அப்பர் அமராவதி அணைக்கட்டுவதன் மூலம் ஆண்டுதோறும் அமராவதி அணையில் இருந்து உபரியாக வெளியேறும் 5 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும். மேலும், 30 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்ய முடியும் எனவும் திட்டமிடப்பட்டது. இதற்கென 1985–ம் ஆண்டு மத்திய, மாநில அரசு அளவிலான உயர்மட்ட பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் இந்த அணை கட்டுவதற்கு தேவையான 600 ஏக்கர் இடம் வனத்துறைக்கு சொந்தமானதாக உள்ளதாலும், அந்த இடம் வனச்சரணாலய பகுதியாக உள்ளதாலும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் பல்வேறு இடங்களில் அணைகள் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

உபரி நீரை சேமிக்க வேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் கோடை தொடங்கும் நிலையில், அமராவதி அணையின் நீர்மட்டம் கவலைக்குரியதாகவே உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அமராவதி அணையின் நீர்மட்டம் 27.79 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 29.87 அடியாகவும், 2015–ம் ஆண்டு இதேநாளில் அணையின் நீர்மட்டம் 25.28 அடியாகவும் இருந்தது.

மழை காலங்களில் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க போதிய வழியில்லாததால் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே மழை காலங்களில் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க உரிய திட்டங்கள் தீட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story