தா.பழூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


தா.பழூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 7 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-08T02:07:23+05:30)

தா.பழூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் வீடு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போய் உள்ளது.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைத்தியநாதன் (வயது 55), சிவானந்தம் (40). இவர்கள் இருவரும் அங்குள்ள விநாயகர் கோவில் அருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவானந்தமும், வைத்தியநாதனும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீடுகளின் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர். பின்னர் நேற்று அதி காலையில் வைத்தியநாதன் எழுந்து வெளியே வந்தபோது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரது சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் சிவானந்தம் எழுந்து வெளியே வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதேபோல் வைத்தியநாதன் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதை யடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை உடைத்து ரூ.1,000-ஐ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வைத்திய நாதன் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சிவானந்தத்தின் மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் உள்ள பொன்னாற்றங்கரையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்குசென்று அந்த மோட்டார் சைக்கிளை மீட்டு சிவானந்தத்திடம் ஒப்படைத் தனர்.

கோவில் உண்டியல் பணம் மற்றும் வீடு முன்பு நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கோடாலிகருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story