பாதியில் நிறுத்தப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி பொதுமக்கள் அவதி


பாதியில் நிறுத்தப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 8 March 2017 10:00 PM GMT (Updated: 8 March 2017 8:18 PM GMT)

வேடசந்தூரில், பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடைவீதி, வ.உ.சி.நகர், பூங்காளியம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் ரூ.90 லட்சம் செலவில் பேவர் பிளாக் கற்கள் (வண்ணகற்கள்) பதிக்கும் பணிக்காக பேரூராட்சி சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது.

முதற்கட்டமாக வ.உ.சி.நகர் மற்றும் பூங்காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அங்கு பதிக்கப்படும் பேவர் பிளாக் கற்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், மேடு, பள்ளமாக பதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அவதி

இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது வ.உ.சி.நகர், பூங்காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தரமற்ற முறையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் பேவர் பிளாக் கற்கள் பாதி பதிக்கப்பட்ட நிலையில் அப்படியே நிறுத்தப்பட்டது.

3 மாதங்கள் ஆகியும் இன்னுமும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story