அலியால் தாலுகாவில் விதவை பெண் மிரட்டி கற்பழிப்பு 8 பேர் கைது


அலியால் தாலுகாவில் விதவை பெண் மிரட்டி கற்பழிப்பு 8 பேர் கைது
x

அலியால் தாலுகாவில் விதவை பெண்ணை மிரட்டி கற்பழித்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி,

அலியால் தாலுகாவில் விதவை பெண்ணை மிரட்டி கற்பழித்த சம்பவம் நடந்து உள்ளது. இதில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

விதவை பெண்

உத்தரகன்னடா மாவட்டம் அலியால் தாலுகா கரடோள்ளி பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் அந்த விதவை பெண் அந்தப்பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் கடந்த மாதம் (பிப்ரவரி) 28–ந் தேதி வேலையை முடித்துவிட்டு தனியாக வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கெசரோள்ளி பகுதியை சேர்ந்த பயாஜி (வயது 26) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

இந்த நிலையில் தனியாக சென்று கொண்டு இருந்த அந்த பெண்ணிடம், பயாஜி நைசாக பேச்சு கொடுத்தார். மேலும் அந்த பெண்ணிடம் உங்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். பயாஜி கூறியதை உண்மை என நம்பிய அந்த பெண், அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்றவுடன் பெண்ணிடம் பயாஜி குடிப்பதற்காக தண்ணீர் கேட்டதாக தெரிகிறது.

மிரட்டி கற்பழிப்பு

அப்போது தண்ணீர் எடுத்துவர அந்த பெண் வீட்டின் உள்ளே சென்றார். அப்போது அவருடைய வீட்டிற்குள் நுழைந்த பயாஜி கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்வதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் மறுநாள்(மார்ச் 1–ந் தேதி) பயாஜி தனது நண்பர்கள் 2 பேருடன் மீண்டும் பெண்ணின் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி மாறி, மாறி கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதேப்போல் கடந்த 6–ந் தேதி வரை அந்த பெண்ணை பயாஜி உள்பட 9 பேர் தொடர்ந்து கற்பழித்து வந்ததாக தெரிகிறது.

8 பேர் கைது

இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு தினமும் சில ஆண்கள் வந்து செல்வதை பார்த்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டு உள்ளனர். அப்போது அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுது உள்ளார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து அந்த பெண், அந்தப்பகுதி மக்கள் உதவியுடன் அலியால் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் அலியால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விதவை பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக பயாஜி, அவரது நண்பர்களான சாதிக், அருண், தலாயத், சமீல், உசேன்சாப், இலியாத், சிக்கந்தர் ஆகிய 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.Next Story