தர்மபுரி மாவட்டத்தில் 24,473 மாணவ–மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர்


தர்மபுரி மாவட்டத்தில் 24,473 மாணவ–மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2017 10:15 PM GMT (Updated: 8 March 2017 8:58 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 24 ஆயிரத்து 473 மாணவ–மாணவிகள் எழுதினார்கள். தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 304 பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 437 மாணவர்கள், 11 ஆயிரத்து 379 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 657 பேர் என மொத்தம் 24 ஆயிரத்து 473 மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தர்மபுரி மாவட்டத்தில் 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 வினாத்தாள் கட்டு மையங்களில் இருந்து வினாத்தாள்கள் 31 வழித்தடங்கள் வழியாக சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இந்த தேர்வை எழுதிய 63 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன.

கண்காணிப்பு குழுக்கள்

கல்வித்துறையை சேர்ந்த 255 பேர் கொண்ட பறக்கும் படை குழுவினர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என மாவட்டம் முழுவதும் 2,705 பேர் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் அதிகாரிகள் அடங்கிய 7 கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடுகளை தடுக்க பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சசிகலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினார்கள்.


Next Story