தஞ்சையில் உழைக்கும் பெண்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் உழைக்கும் பெண்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2017 9:08 PM GMT (Updated: 8 March 2017 9:08 PM GMT)

தஞ்சையில் உழைக்கும் பெண்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.ஐ.டி.யூ.சி. உழைக்கும் பெண்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சிகப்பியம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் பரிமளா, நிர்வாகிகள் சுதா, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் செல்வதையல்நாயகி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் உள்ளிட்ட அனைத்து வித வன்கொடுமைகளை எதிர்த்து உறுதியுடன் போராடுவதுடன், மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம்

பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவியாக நலவாரியம் மூலம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பஞ்சாலை மற்றும் ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் அதிகரித்துள்ள நவீன கொத்தடிமை முறையான சுமங்கலி திட்டத்தை ஒழிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுகி, சுகுணா, வளர்மதி, வள்ளி, எலிசபெத், சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story