ஜெயலலிதா விட்டு சென்ற மக்கள் பணிகளை நிறைவேற்றுவேன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி


ஜெயலலிதா விட்டு சென்ற மக்கள் பணிகளை நிறைவேற்றுவேன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 10:32 PM GMT)

ஜெயலலிதா விட்டுச் சென்ற மக்கள் பணிகளை நிறைவேற்றுவேன் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை,

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் 1004 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட அரசு திட்டங்களுக்கான தொடக்க விழா, மதுரை உலகத்தமிழ்ச் சங்க கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மதுரை மாநகருக்கு மற்றொரு பெயர் தூங்கா நகரம். இதற்குக் காரணம், இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து வணிகம் செய்கிறார்கள் மதுரை மாநகர மக்கள். மீன் தூங்குவது இல்லை. மீனைப்போன்ற கண்களையுடைய அனைவரையும் காக்கும் மீனாட்சி தாயும் தூங்காமல் கண் விழித்து மதுரை மக்களை காப்பாற்றி வருகிறார் என்ற மற்றொரு பொருளிலும் மதுரையை தூங்கா நகரம் என்று அழைக்கிறோம். அ.தி.மு.க.வின் ஆணி வேராகத் திகழ்ந்த ஜெயலலிதா எங்களுக்கு மகா சக்தியாக விளங்கி தமிழக மக்களை காப்பாற்ற கண் துஞ்சாமல் அயராது உழைத்தார்கள். ஜெயலலிதா ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘‘பெண்கள் நினைத்தால் தங்கள் தலையெழுத்தை மட்டுமல்ல, மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும். அவர்களுக்குத் தேவை வாய்ப்புகள். அந்த வாய்ப்புகளை வழங்குவதே எனது லட்சியம்“ என்று கூறினார்.

இன்றைய விழாவில் மதுரை உள்பட 6 மாவட்டங்களில், பலதுறைகளின் சார்பில் 1004 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6,874 திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது.

மீன்பிடி தொழில்

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முதன்மை தொழிலாக நடந்து வருகிறது. ஜெயலலிதா மீனவர்களின் நலனிலும் பாதுகாப்பிலும் அதிக அக்கறை கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். முந்தைய தி.மு.க. அரசு 2010–11–ம் ஆண்டில் மீன்வளத்துறைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 193 கோடியே 33 லட்சம் ரூபாயை, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 743 கோடியே 79 லட்சம் ரூபாயாக பன்மடங்கு உயர்த்தினார் ஜெயலலிதா.

மாநிலத்தின் மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை முனைப்புடன் மேம்படுத்தும் விதமாக, கடந்த 5 ஆண்டுகளில் எப்பொழுதும் இல்லாத வகையில் 1,104 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை செய்து முடித்துள்ளது. பாக் வளைகுடா பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையினை நிலைநாட்டுவதிலும், தி.மு.க. ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவினை மீட்டெடுப்பதிலும் ஜெயலலிதா எடுத்த உறுதியான நிலைப்பாட்டினை தற்போதுள்ள இந்த அரசும் தொடர்ந்து வலியுறுத்தும்.

தொடர் சிகிச்சை

இந்தநிலையில், கடந்த 6–ந்தேதி ராமேசுவரம் மீனவர்கள் பாக் வளைகுடாவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டு, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மற்றவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டேன்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை உடனடியாக நிறுத்த பிரதமரை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன். அதற்கிணங்க, மத்திய அரசும் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பிற்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாவலராக ஜெயலலிதா விளங்கியதைப் போல, இந்த அரசு மீனவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதிபடக் கூறிக் கொள்கிறேன்.

கடும் வறட்சி

தமிழ்நாட்டில் நடப்பாண்டு பருவமழை பொய்த்த காரணத்தினால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் இன்னல்களை போக்கும் வண்ணம் விவசாயிகளுக்கு 2,247 கோடி ரூபாய் பயிர் இழப்பு வறட்சி நிவாரணத் தொகை வழங்கிட இந்த அரசு உடனடியாக உத்தரவிட்டது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்பட உள்ளது. இதனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட 32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகள் பயனடைவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

விசுவாசமாக...

வறட்சி காரணமாக நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்களை மேம்படுத்த 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

ஜெயலலிதா அடிக்கடி ஒன்றை கூறுவார்கள், “என் எண்ணங்கள் மக்களை சுற்றியே அமைந்திருக்கின்றன, என்னுடைய செயல்பாடுகள் மக்களை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது‘‘ என்பார். “ஏழைகள் ஏழைகளாகவே இருந்து விடக்கூடாது. அவர்களுடைய நிலை உயர வேண்டும். அதற்காகவே அல்லும்பகலும் நான் உழைத்து வருகிறேன்‘‘ என்று கூறி, தன்னை பின்பற்றுகிறவர்களையும் மக்களுக்காக உழைக்க ஊக்கப்படுத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா விட்டுச்சென்ற மக்கள் பணிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என இந்த விழாவில் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த விழாவில் கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி, ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story