விருகம்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது


விருகம்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2017 11:30 PM GMT (Updated: 10 March 2017 8:04 PM GMT)

விருகம்பாக்கத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 14 பவுன் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், தெருவில் தனியாக நடந்து சென்ற மணிமேகலை, கல்பனா, சர்மிளா ஆகிய 3 பெண்களிடம் 14 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசியப்பன், வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வருவதும், பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டும் ஆசாமி மெதுவாக ஓட்ட, பின்னால் அமர்ந்து இருக்கும் நபர், தெருவில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலியை பறித்து விட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக தப்பிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

வீடியோ காட்சியில் பதிவாகி இருந்த உருவங்களை வைத்து போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்தநிலையில் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார், ராயலா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர்.

அவர்கள் இருவரும் கண்காணிப்பு கேமராவில் பதிவான சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் போன்ற தோற்றத்தில் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், 2 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த சரவணன் (வயது 23) மற்றும் பெரவள்ளூரை சேர்ந்த கவுஸ்பாட்ஷா (24) என்பதும், இவர்கள் தான் விருகம்பாக்கம் பகுதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 14 பவுன் சங்கிலியை பறித்து சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது.

2 பேர் கைது

மேலும் இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக சென்னை விருகம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், ராயலா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

மோட்டார் சைக்கிளை கவுஸ்பாட்ஷா மெதுவாக ஓட்ட, சரவணன் பெண்களிடம் சங்கிலி பறித்து விட்டு ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விடுவார்கள் என்பது தெரிந்தது. பின்னர் பிடிபட்ட 2 பேரும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சரவணன், கவுஸ்பாட்ஷா இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தினர்.

கொலை வழக்கு

நாகர்கோவில் பகுதியில் நடந்த சேவல் சண்டையில் சரவணனின் சேவல் வென்று விட்டது. அந்த சண்டையில் கவுன்சிலர் ஒருவரின் சேவல் தோல்வி அடைந்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் தனது சேவலையும், சரவணன் சேவலையும் கொன்று விட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் அந்த கவுன்சிலரை, சரவணன் வெட்டிக்கொலை செய்தார்.

மேலும் அவர், மாதவரத்திலும் ஒருவரை நடுரோட்டில் வைத்து கொலை செய்து உள்ளார். சரவணன் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளில் கைதாகி கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த சரவணன், கவுஸ்பாட்ஷா சொந்த ஊரில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் நடனம் ஆடும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. பின்னர் இருவரும் சமாதானம் அடைந்து நெருங்கிய நண்பர்களாக உலா வந்தனர்.

55 பவுன் நகை பறிமுதல்

இந்தநிலையில் நண்பர்கள் இருவரும் ‘மெட்ரோ’ என்ற தமிழ் சினிமா படத்தை பார்த்தனர். அந்த படம் முழுக்க, முழுக்க நகை பறிப்பு சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதன்பிறகு சரவணன், கவுஸ்பாட்ஷா இருவரும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்து, அதன்படி தொடர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த நகைகளை விற்று கிடைக்கும் பணத்தில் இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர் என்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான சரவணன், கவுஸ்பாட்ஷா இருவரிடம் இருந்தும் 55 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story