மந்திரவாதியின் குடிலுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு


மந்திரவாதியின் குடிலுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
x
தினத்தந்தி 20 March 2017 2:19 AM IST (Updated: 20 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

மந்திரவாதியின் குடிலுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

பாடாலூர்,

பெரம்பலூரில் வீடு எடுத்து பூஜை நடத்த பெண் பிணத்தை வைத்து மாந்திரீக வேலையில் ஈடுபட்டதாக மந்திரவாதி கார்த்திகேயன் உள்பட 6 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் இருந்து மருதடி செல்லும் சாலையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் மந்திரவாதி கார்த்திகேயனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவில் கோரைப்புற்களை வைத்து கொட்டகை அமைத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாந்திரீகம் செய்து வந்ததாக கார்த்திகேயனை பாடாலூர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அதன் பிறகு அவர் வெளியே வந்து விட்டார். இந்த நிலையில் மருதடியில் இருந்த கார்த்திகேயனுக்கு சொந்தமான கொட்டகைக்கு மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு தீ வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் தீயணைப்பு படைவீரர்கள் அந்த கொட்டகையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் அந்த கொட்டகை எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீ விபத்தில் கொட்டகையிலிருந்த பூஜை பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த குடிலில் முக்கிய ஆவணங்களை மந்திரவாதி பதுக்கி வைத்திருக்கலாம் எனவும், இந்த ஆவணங்கள் போலீசுக்கு கிடைத்து விட்டால் முக்கிய நபர்கள் சிக்கிவிடுவார்கள் என்பதால் கார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பர்கள் தான் தீ வைத்துள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story