ஆவண எழுத்தர் தேர்வை நடத்தக்கோரி பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது


ஆவண எழுத்தர் தேர்வை நடத்தக்கோரி பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஆவண எழுத்தாளர் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி தமிழ்நாடு பத்திரம் - நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

 ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.பத்மநாபன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் ஆர்.சேவியர் பெர்ணான்டோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்.பத்மநாபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசாணை வெளியிடப்பட்ட ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். நகல் எழுத்தர்களின் வாழ்வாதாரத்திற்காக ஆவண எழுத்தர் தேர்வை நடத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நிபந்தனையின்றி ஆவண எழுத்தர்களை சேர்க்க வேண்டும்.

சார்பதிவாளர் அலுவலக வளாகங்களில் ஆவண எழுத்தர்கள் அமர்ந்து பணி புரிய இடம் ஒதுக்கவும், அவர்களின் எழுத்துக்கூலியை உயர்த்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த 6 மாத காலமாக ஆவணங்கள் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முடக்க நிலையை களைவதற்கான கொள்கை முடிவுகளை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story