செல்போனில் பேசினாலே ‘சார்ஜ்’ ஆகும்!


செல்போனில் பேசினாலே ‘சார்ஜ்’ ஆகும்!
x
தினத்தந்தி 25 March 2017 7:27 AM GMT (Updated: 25 March 2017 7:27 AM GMT)

நீங்கள், போக்குவரத்து இரைச்சல் மிகுந்த சாலையில் செல்கிறீர்கள் என்றால், பாக்கெட்டில் செல்போன் இருந்தாலே போதும், நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அடைந்ததும் பார்த்தால் செல்போன் சார்ஜ் ஆகியிருக்கும்.

ன்றைக்கு செல்போன் இல்லாமல் எவருக்கும் ஒருநாளும் செல்லாது.

பலருக்கு ஸ்மார்ட்போனின் சிறிய திரைக்குள் உலகம் சுருங்கிவிட்டது. அதிலேயே எப்போதும் மூழ்கிக் கிடக்கின்றனர்.

ஆனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சந்திக்கும் சிரமம், அதில் அடிக்கடி ‘சார்ஜ்’ வடிந்துபோவது.

அதிலும் தொலைதூர இடங்கள், தகுந்த வசதியற்ற சூழல்களில் ‘சார்ஜ்’ ஏற்றும் சிரமம் அதிகம்.

அதற்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார், சென்னை இளைஞர் லட்சுமி நாராயணன். இவரது கண்டுபிடிப்பின் மூலம், பேசினாலே செல்போனில் சார்ஜ் ஆகிவிடும்.

ஆச்சரியமாக இருக்கிறதுதானே?


அதுபற்றி லட்சுமி நாராயணனே சொல்லட்டும்...


சென்னைப் பையன்

‘‘நான் முழுக்க முழுக்க சென்னைப் பையன்தான். இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்திருக்கிறேன். தற்போது குரோம்பேட்டையில் வசிக்கிறோம். எங்கப்பா திருவரங்கநாதன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அம்மா உஷா தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். ஒரே அக்கா அகிலாவுக்குத் திருமணமாகிவிட்டது. நாங்கள் இதற்கு முன் கே.கே. நகரில் இருந்தோம். அங்குள்ள கிருஷ்ணசாமி மெட்ரிக்குலே‌ஷன் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன். பள்ளி நாட்களில் நான் ஒரு சராசரி மாணவன்தான்.

பொறியியல் படிப்பின்போது...

பிளஸ் டூ முடித்ததும் தண்டலம் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியில் பி.இ. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் சேர்ந்தேன். நிறைவாண்டில் ஒரு புராஜெக்ட் செய்ய வேண்டும் என்றபோது, பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு உதவக்கூடியதாக, எளிமையானதாக ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்று எண்ணினேன். அந்த நோக்கிலான எனது சிந்தனையில் உருவானதுதான், சப்தத்தை மின்சாரமாக மாற்றும் அமைப்பின் மூலம் செல்போனுக்கு சார்ஜ் செய்வது.

அடிப்படைப் பொருள்

எனது சாதனத்தின் அடிப்படைப் பொருள், ‘பீசோ எலக்ட்ரிக் கிரிஸ்டல்’ என்பதாகும். இது, சப்தங்கள், அதிர்வுகளை ஏற்று, மின்சாரமாக வெளியிடக்கூடியது. மேலும், கன்டென்சர் மைக், ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் ஐ.சி, டையோடு, கெப்பாசிட்டர்   போன்றவை இருக்கின்றன. இது மிகவும் எடை குறைவான, எளிய அமைப்புதான். தற்போது தனியாக இதை உருவாக்கியிருந்தாலும், செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்தால், இதை செல்போனிலேயே ‘இன் பில்ட்’ ஆக, அதாவது உள்ளிணைந்ததாக உருவாக்க முடியும்.

ஓராண்டு கால உழைப்பு

எனது சாதனத்துக்கான அடிப்படை யோசனை, திட்டமிடலை உருவாக்கிவிட்டாலும், இதை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு ஓராண்டு காலம் உழைத்தேன். அப்படி இதை உருவாக்கும்போது சின்னச் சின்ன பிரச்சினைகள், பின்னடைவுகள் வந்தன. ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்து, இறுதியில் வெற்றி பெற்றேன். இந்தச் சாதனத்தை உருவாக்குவதற்கு ஓராண்டு காலம் பிடித்தாலும், செலவு என்பது வெகு குறைவு. அதாவது, நூறு ரூபாய்தான் செலவானது. இன்னும் ஏதாவது ஒரு நிறுவனம் இதை ஏற்று பெருமளவில் தயாரித்தால், 50 ரூபாய்க்குள் முடித்துவிடலாம்.

சப்தமே சக்தி

நான் முதலிலேயே கூறியபடி, சப்தமே சக்தி என்ற அடிப்படையில் இந்தச் சாதனம் செயல்படுகிறது. சப்தம் என்றில்லை, அதிர்வுகளும் கூட இதில் மின்சக்தியாக மாறும். எனவே அதற்கேற்ற இடங்களில் நீங்கள் இச்சாதனத்துடன் இணைந்த செல்போனை வைத்திருந்தால் போதும். குறிப்பிட்ட அரைமணி, ஒருமணி நேரத்தில் செல்போன் ஓரளவு சார்ஜ் ஆகிவிடும். உதாரணமாக நீங்கள், போக்குவரத்து இரைச்சல் மிகுந்த சாலையில் செல்கிறீர்கள் என்றால், பாக்கெட்டில் செல்போன் இருந்தாலே போதும், நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அடைந்ததும் பார்த்தால் செல்போன் சார்ஜ் ஆகியிருக்கும். ரெயில் நிலையங்கள், பெரிய ஸ்பீக்கர்கள் ஒலிக்கும் பொதுக்கூட்டங்கள் போன்ற இடங்களிலும் உங்கள் செல்போனுக்கு மின்சக்தி கிடைத்து விடும். செல்போனில் பேசும்போது என்று பார்த்தால், நாம் சாதாரணமாக செல்போனில் சற்று நீண்டநேரம் பேசியதும் அதில் ஒன்றிரண்டு பாயிண்ட் சார்ஜ் குறைந்திருக்கும். ஆனால் எனது சாதனத்துடன் இணைந்த செல்போனில் நீங்கள் பேசும்போது, அதன் சார்ஜ் அப்படியே இருப்பதுடன் மட்டுமல்லாமல், ஓரிரு பாயிண்ட் கூடியிருக்கும்.

பல்வேறு பயன்பாடுகளுக்கும்...

நான் என்னுடைய கண்டுபிடிப்பை நானே நடைமுறைரீதியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டிருப்பதால்தான் என்னால் இந்த அளவு உறுதியாகக் கூற முடிகிறது. நான் வெளியிடங்களுக்கு இதைக் கொண்டு செல்லும்போது ஒரு சிலர் வித்தியாசமாகப் பார்த்தாலும், இதன் பலனை நான் அனுபவித்திருக்கிறேன். அந்த வகையில் இது எனக்குத் திருப்தியும் நிறைவும் தருகிறது. உண்மையில் இந்தத் தொழில்நுட்பத்தை செல்போன் அன்றி, லேப்டாப், எல்.இ.டி. விளக்குகள் என்று பலவற்றுக்கும் பயன்படுத்தலாம். நம்மூரில் இரைச்சலுக்குக் குறைவில்லை. அதை இப்படி மின்சக்தியாக மாற்றிக்கொள்ளலாம். செல்போன் ஸ்பீக்கரில் பாட்டு கேட்கிறோம் என்றாலும், அந்த ஒலியைப் பயன்படுத்தி எல்.இ.டி. விளக்குகளை ஒளிர வைக்கலாம். அந்தவகையில், மின்சாரம் இல்லாத நேரத்தில் இது மிகவும் கைகொடுக்கும். தெருவிளக்குகள், போக்குவரத்து சிக்னல் விளக்குகள், ஒளிரும் எச்சரிக்கை அமைப்புகள் ஆகியவற்றைக் கூட இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தலாம்.

கை கொடுத்தவர்கள்

எனது கண்டுபிடிப்பு யோசனையை செயலாக்கம் செய்தபோது ஏற்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்ய விவேக் என்பவர் உதவினார். எனது நண்பர்கள் தினேஷ், மற்றொரு தினேஷ், கோகுலகிருஷ்ணன் போன்றோரும் இதுதொடர்பான தகவல்களைத் திரட்டிக்  கொடுத்தனர்.  நான் இந்தச் சாதனத்தை வெற்றிகரமாக உருவாக்கிப் பயன்படுத்தியதும், இதுகுறித்து பிரபல செல்போன் தயாரிப்பு  நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் இதுவரை பதிலில்லை. ஆனால் அதற்காக சோர்ந்துவிடாமல் நான் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்பேன்.

அடுத்த முயற்சிகள்

பேசினாலே செல்போனை சார்ஜ் செய்யும் சாதனம்தான் எனது முதல் கண்டுபிடிப்பு. ஆனால் இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் நான் மேலும் பல கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முனைகிறேன். உதாரணமாக, வீட்டில் உள்ள மின்சாதனங்களில் எவை எவை செயல்பாட்டில் இருக்கின்றன என்று வெளியில் இருந்தபடியே அறிவது, அவற்றில் தேவையானவற்றை இயக்குவது, அணைப்பதற்கு வை–பை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைத் திட்டத்தை உருவாக்கி விட்டேன். அதேபோல, தற்போது சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில், நகையில் பொருத்தக்கூடிய ஒரு நானோ ஜி.பி.எஸ். கருவியை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இதன்மூலம், பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்டாலும் கூட கண்டுபிடித்துவிட முடியும். இதுபோல, அனைவருக்கும் பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்கத்தான் எனக்கு ஆசை.

வானமே எல்லை

அறிவியல் நோக்கில் சிந்திக்கத் தொடங்கினால், வானமே எல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். மேலும் மேலும் இதே திசையில் எனது பயணம் தொடரும். இப்போதைக்கு பொருளாதாரம்தான் எனது பல முயற்சிகளுக்குத் தடைக்கல்லாக இருக்கிறது. தகுந்த ஸ்பான்சர் கிடைத்தால் என்னால் தடையின்றி புதுமை முயற்சிகளை மேற்கொள்ள இயலும். நாளை எல்லாம் நலமாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக் கிறது!’’

லட்சுமி நாராயணனின் முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

Next Story