மாணவர்கள் எதிர்காலம் குறித்து கனவு காண வேண்டும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேச்சு


மாணவர்கள் எதிர்காலம் குறித்து கனவு காண வேண்டும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேச்சு
x
தினத்தந்தி 30 March 2017 9:30 PM GMT (Updated: 30 March 2017 1:37 PM GMT)

மாணவர்கள் எதிர்காலம் குறித்து கனவு காண வேண்டும் என்று திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசினார்.

திருவண்ணாமலை,

மாணவர்கள் எதிர்காலம் குறித்து கனவு காண வேண்டும் என்று திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசினார்.

பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொன்விழா ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி தந்தை பெரியார் அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சின்னையா வரவேற்றார்.

கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே 1,223 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:–

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலக்கட்டங்களில் ஒன்று கல்லூரி பருவம். அதனை மாணவர்களாகிய நீங்கள் தற்போது நிறைவு செய்துள்ளீர்கள். கல்லூரியில் பட்டம் வாங்கிய மாணவர்கள் மனதில் தற்போது அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற பயமும், ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.

கனவு காண வேண்டும்

வாழ்க்கையின் அடுத்த கட்டம் பற்றி நினைக்கும்போது கண்களில் கண்ணீரும், கனவும் காணப்படும். படித்து முடித்தவுடன் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்று எண்ணாமல் வாழ்க்கை குறித்து கனவு காண வேண்டும். மாணவர்களுக்கு தற்போது கனவு காணும் வயதாகும். எதிர்காலம் குறித்து மாணவர்கள் கனவு காண வேண்டும்.

வாழ்க்கையில் பணம், வேலை, அந்தஸ்து எல்லாம் தேவை தான். ஆனால் அதைவிட நாம் கண்ட கனவை நோக்கி செல்வது முக்கியமானதாகும். இங்கு கனவுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஓவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். கனவு காணும் வயதில் கனவு காணாமல், 60 வயதுக்கு மேல் அதனை நினைத்து வருத்தப்படுவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கனவுகளுக்கு எல்லை இல்லை

மாணவர்கள் கனவு காண நேரம், வயது, வாய்ப்பு இருந்தும் அதனை பயன்படுத்த தவறக்கூடாது. நமது கனவு எது வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் கண்ட கனவை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். மகாத்மா காந்தி, அப்துல்கலாம் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் தாங்கள் கண்ட கனவை நோக்கி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும் பயணம் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் அதில் வெற்றி பெற்றனர்.

மாணவர்கள் கனவுக்காக கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும். கனவுகளுக்கு எல்லை இல்லை. உங்கள் நம்பிக்கை உங்கள் மேல் தான் இருக்க வேண்டும். கனவை நோக்கி தொடர்ந்து அயராத முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள், அவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story