183 சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்


183 சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 30 March 2017 9:00 PM GMT (Updated: 2017-03-30T19:07:20+05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 183 சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 183 சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 10–ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

183 காலிப்பணியிடங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்ட பள்ளி, சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 183 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் திருவண்ணாமலையில் 22, கீழ்பென்னாத்தூரில் 2, துரிஞ்சாபுரத்தில் 11, போளூரில் 24, கலசபாக்கத்தில் 8, சேத்துப்பட்டில் 10, செங்கத்தில் 25, புதுப்பாளையத்தில் 10, தண்டராம்பட்டில் 5, ஜவ்வாதுமலையில் 18, செய்யாறில் 11, வெம்பாக்கத்தில் 1, வந்தவாசியில் 7, பெரணமல்லூரில் 3, ஆரணியில் 5, மேற்கு ஆரணியில் 10 இடங்கள் என ஊராட்சி ஒன்றியங்களில் 172 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் மற்றும் திருவண்ணாமலை நகராட்சியில் 2, ஆரணி நகராட்சியில் 4, திருவத்திபுரம் நகராட்சியில் 5 என நகராட்சியில் 11 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் என மொத்தம் 183 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

40 வயது மிகாதவர்கள்...

ஆதிதிராவிடர் அருந்ததியினர் 6, ஆதிதிராவிடர் பிரிவினர் 27, பழங்குடியினர் 2, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்கள் 6, முஸ்லிம்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 49 இடங்களும், பொதுப்பிரிவினருக்கு 57 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுபிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 1.2.2017 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும். 5–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். பழங்குடியினர் 1.2.2017 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 1.2.2017 அன்று 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும். 5–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.

மேற்படி பணியிடங்கள் அரசு விதிமுறைகளின் படியும், நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டும் நிரப்பப்படும். கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி, விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் இதர முன்னுரிமை சான்றுக்கான ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 10–ந் தேதி கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஏப்ரல் மாதம் 10–ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நியமன பணியிடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

ஒரு விண்ணப்பத்தில் ஒரு சத்துணவு மைய காலி பணியிடத்தை மட்டுமே குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். சத்துணவு மைய காலி பணியிடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இனத்தை சேர்ந்தவரை தவிர மற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். இருப்பிடத்திற்கு ஆதாரமாக இருப்பிட சான்று மற்றும் ஆதார் அடையாள அட்டையின் நகல் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உடல் ஊனமுற்றோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்.

சமையல் உதவியாளர் காலிப்பணியிட விவரம், இனசுழற்சி ஒதுக்கீடு விவரம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story