குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 March 2017 9:45 PM GMT (Updated: 30 March 2017 7:12 PM GMT)

முகலிவாக்கம்– மணப்பாக்கம் சாலையில் உள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை பெருநகர மாநகராட்சி 12–வது மண்டலம் 156–வது வார்டுக்கு உட்பட்ட முகலிவாக்கத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அம்பேத்கர் விளையாட்டு திடலை அந்த பகுதி மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அம்பேத்கர் இளைஞர்கள் சங்கம் மற்றும் அந்த பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் என 150–க்கும் மேற்பட்டோர் முகலிவாக்கம்– மணப்பாக்கம் சாலையில் உள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘இந்த விளையாட்டு திடலை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. எனவே இந்த இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம். குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் துர்நாற்றம் வீசும். எனவே மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போரூர் உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, மாங்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story