சித்தராமையாவுக்கு, ஈசுவரப்பா கேள்வி வக்பு வாரிய முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்?


சித்தராமையாவுக்கு, ஈசுவரப்பா கேள்வி வக்பு வாரிய முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்?
x
தினத்தந்தி 30 March 2017 7:36 PM GMT (Updated: 2017-03-31T01:06:21+05:30)

வக்பு வாரிய முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்? என்று சித்தராமையாவுக்கு ஈசுவரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

மைசூரு,

வக்பு வாரிய முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்? என்று சித்தராமையாவுக்கு ஈசுவரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈசுவரப்பா பேட்டி

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் சீனிவாச பிரசாத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய மைசூருவுக்கு வந்திருந்த கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் இதுவரை இந்த நிதியை கர்நாடக அரசு முறையாக பயன்படுத்தவில்லை. அதேப் போல் மாநில அரசும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அந்த நிதியும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தற்போது மாநில அரசு, ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டுக்கு ஒதுக்கிய நிதியை நடப்பு ஆண்டில் பயன்படுத்தாவிட்டால், அடுத்த ஆண்டு பயன்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், அந்த நிதி வீண் அடிக்கப்படாது எனவும் கர்நாடக அரசு கூறி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் தற்போது அரசின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. பிறகு எப்படி அந்த நிதியை செலவிட முடியும். அந்த நிதி எப்போது செலவிடப்படும் என்று அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசியல் சாசனத்தின் படி எந்த சமுதாயத்தினருக்கும் எந்தத் துறையிலும் 50 சதவீதத்திற்கு மேலாக ஒதுக்கீடு இல்லை. ஆனால் முதல்–மந்திரி சித்தராமையா, ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அனைத்து துறைகளிலும் 72 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது எப்படி சாத்தியம்?. இதற்கு உரிய பதிலை சித்தராமையா வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்?

முஸ்லிம் மக்களின் நலத்திற்காக வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் ரூ.53 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் இந்த முறைகேடு குறித்து சித்தராமையா விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்?. மைசூரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான லோடு மணல் திருட்டு தினமும் நடந்து வருகிறது. இந்த மணல் கடத்தலுக்கு மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, தன்வீர்சேட் ஆகியோர் உடந்தையாக இருக்கிறார்கள். இதை முதல்–மந்திரி சித்தராமையாவும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதன் மூலே மணல் கடத்தில் அவரும் உடந்தையாக இருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story