3 சுரங்கப்பாதைகள் அமைப்பு: இறுதிக்கட்டத்தில் தஞ்சை– திருச்சி இரட்டை ரெயில்பாதை பணிகள்


3 சுரங்கப்பாதைகள் அமைப்பு: இறுதிக்கட்டத்தில் தஞ்சை– திருச்சி இரட்டை ரெயில்பாதை பணிகள்
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-31T02:28:23+05:30)

தஞ்சை– திருச்சி இரட்டை ரெயில்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக 103 பெரிய, சிறிய பாலங்கள் மற்றும் 3 சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் தஞ்சையும் ஒன்று. இந்த தஞ்சை வழியாகத்தான் முன்பு அதிக அளவில் தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்–திருச்சி இடையேயான ரெயில் பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை வழியாக 29–க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயிலும், 15–க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை, மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு கும்பகோணம் வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி, நாகூர், கோவில் நகரமான கும்பகோணத்திற்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். தஞ்சை– திருச்சி இடையே ஒருவழிப்பாதை என்பதால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ரெயில் நிலையத்தில் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. சில நேரங்களில் ரெயில்கள் 1 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள். எனவே தஞ்சை– திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

இரட்டை ரெயில்பாதை


இதையடுத்து மத்திய அரசு தஞ்சை– திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. கடந்த 2011–ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சை– திருச்சி இடையே பொன்மலை வரை 49 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற முதல்கட்டமாக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருவழிப்பாதை பணிகள் முழு வீச்சில் தொடங்கின. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.450 கோடியாகும்.

இந்த இருவழிப்பாதை பணிகள் தஞ்சை– திருச்சி இடையே இடதுபுறமாக ஏற்கனவே மீட்டர்கேஜ் ரெயில்பாதை இருந்த தடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீட்டர்கேஜ் பாதையில் இருந்த தண்டவாளங்கள், ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டன.

ரெயில் நிலையம் விரிவாக்கம்


இந்த திட்டத்துக்காக பூதலூர், சோளகம்பட்டி, திருச்சி திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. கடந்த ஆண்டு நடந்த கும்பகோணம் மகாமக திருவிழாவிற்கு முன்னதாக பணிகள் முடிவடையும் வகையில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போது இரட்டை ரெயில்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

90 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது தஞ்சை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள சிவாஜிநகர் பகுதி வரை சிலீப்பர் கட்டைகள் பொருத்தப்பட்டு தண்டவாளமும் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் ரெயில்வே பாலம் உள்ள ஒரு சில இடங்களில் மட்டும் தண்டவாளங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவடையும் என ரெயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story