திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-31T02:30:46+05:30)

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வாழைமரங்களை கொண்டு வந்து போட்டு மறியலும் செய்தனர்.

திருச்சி,


திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அதன் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் திடீரென மேல் சட்டை அணியாமல் உடலில் இலை தழைகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மறியல்

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது போதாது, அரசு அறிவித்த படி ரூ.7 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் போட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதிக்கு வந்து தாருடன் வெட்டி வரப்பட்ட இரண்டு வாழை மரங்களை போட்டு அதன் அருகில் சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டமும் நடத்தினார்கள்.

அனைத்து விவசாயிகள்

இந்த போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இன்னொரு புறம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து வெளியேறிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், த.மா.கா. விவசாய அணி, தமிழக விவசாயிகள் சங்கம், அய்யன் வாய்க்கால் பாசன தாரர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த அயிலை சிவசூரியன், ராஜேந்திரன், சின்னத்துரை, ராஜா சிதம்பரம், வீரசேகரன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் தமிழக அரசு பயிர்க்கடனை உடனே தள்ளுபடி செய்யவேண்டும், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷம் போட்டனர். 

Next Story