அ.தி.மு.க.வின் 2 அணிகளுக்கும் ‘டெபாசிட்’ கிடைக்காது மு.க.ஸ்டாலின் பேச்சு


அ.தி.மு.க.வின் 2 அணிகளுக்கும் ‘டெபாசிட்’ கிடைக்காது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-31T02:31:44+05:30)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் 2 அணிகளுக்கும் ‘டெபாசிட்’ கிடைக்காது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பரிவீரமங்கலத்தில் நேற்று நடந்த முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் இல்ல திருமண விழாவில், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பதவி வெறி

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, தமிழ்நாட்டை காப்பாற்றிட வேண்டும் என்று சொன்னால் தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டிலே உருவாகிட வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் ஜெயலலிதா உடல்நலமுடன் இருந்த நேரத்தில் கூட அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதில்லை.

ஆனால், இன்றைக்கு என்ன நிலை? அவர் மறைந்ததற்கு பிறகு அவரால் உருவாக்கப்பட்ட கட்சி இரண்டாக உடைந்திருக்கிறது. 2 அணிகளும் பிரிந்து நாட்டையே குட்டி சுவராக்கக்கூடிய நிலை. 2 அணிகளும் ஒன்றாக இருந்தபோது கொள்ளையடித்தவர்கள் தான்.

அவர்களுக்கு தற்போது யார் முதல்-அமைச்சராக அமர்வது? என்ற பதவிவெறி பிடித்துள்ளது. ஏனென்றால், அந்த பதவியில் அமர்ந்தால் தான் மணல் கொள்ளை அடிக்கலாம், தாது மணலை கொள்ளையடிக்கலாம், ஊழல் செய்யலாம்.

டெபாசிட் கிடைக்காது

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில், ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையக்கூடிய தேர்தலாக, ஆர்.கே.நகரில் நடைபெறக்கூடிய இடைத்தேர்தல் அமையும்.

‘நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’, என்று தினகரன் சொல்கிறார். இன்னொரு அணியான ஓ.பி.எஸ் அணி, ‘தி.மு.க எங்கு இருக்கிறது? என்றே தெரியவில்லை’, என்கிறது. 2 அணியாக பிரிந்திருக்கக்கூடிய நீங்கள் முதலில் ‘டெபாசிட்’ வாங்குங்கள். உங்களுக்கு டெபாசிட் கிடைக்காது. இது நடக்கிறதா இல்லையா? என்று பாருங்கள்.

அந்த அளவிற்கு மக்கள் 2 அணியாக உடைந்திருக்கும் அ.தி.மு.க மீது கோபமாக, வெறுப்பாக, ஆத்திரமாக, அவர்களை ஒழிப்பது தான் முதல் வேலை என்று ஆர்.கே.நகரில் இருக்கும் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களும் அந்த நிலையில் தான் இருக்கிறார்கள். ஆதலால்தான், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கூட அச்சப்படுகிறார்கள்.

சட்டமன்றத்தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறதோ, இல்லையோ அதற்கு முன்பாக நிச்சயம், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வகையில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

அந்த தேர்தல் மூலம் மக்களின் ஆதரவினை நேரடியாக பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்று, நிச்சயமாக உறுதியாக தி.மு.க. தலைமையில் ஒரு உன்னதமான ஆட்சி தமிழகத்தில் உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story