திருவலம் அருகே பேண்டு வாத்திய குழுவினரின் வேன் கவிழ்ந்து வாலிபர் பலி 12 பேர் படுகாயம்


திருவலம் அருகே பேண்டு வாத்திய குழுவினரின் வேன் கவிழ்ந்து வாலிபர் பலி 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 April 2017 11:30 PM GMT (Updated: 2017-04-07T00:39:15+05:30)

திருவலம் அருகே பேண்டு வாத்திய குழுவினர் சென்ற வேன் கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயத்தை சேர்ந்தவர் ஞானம். பேண்டு வாத்திய குழு வைத்துள்ளார். நேற்று முன்தினம் பொன்னை அருகே உள்ள ஒட்டனேரி கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சியில் பேண்டு வாசிக்க, ஞானம் உள்பட 24 பேர் கொண்ட குழுவினர் ஒரு வேனில் சென்றனர்.

திருவிழாவை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு வாத்திய குழுவினர் வாணியம்பாடிக்கு வேனில் திரும்பினர். இந்த வேனை, வாணியம்பாடியை அடுத்த கோமிட்டேரியை சேர்ந்த நாகராஜ் (34) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.

வேன் தலைகுப்புற கவிழ்ந்தது

திருவலம் அருகே பொன்னை ரோட்டில் உள்ள குகையநல்லூரில் வேன் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் ஆலங்காயத்தை சேர்ந்த கே.சதீஷ் (வயது 25) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

12 பேர் படுகாயம்

வேனில் பயணித்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். பேண்டு வாத்தியங்கள் சாலையில் சிதறி ஓடியது.

இந்த விபத்தில் டிரைவர் நாகராஜ், நிம்மியம்பட்டை சேர்ந்த அருண்குமார் (25), சரண் (19), ஆலங்காயத்தை சேர்ந்த சந்துரு (16), வி.சதீஷ் (22), சேட்டு (20), பெட்டூரை சேர்ந்த கோகுல் (18), அஜீஸ் (18), குமரேசன் (37), ஆசனாம்பட்டை சேர்ந்த ஜஸ்டின் (40), சிவக்குமார் (34), கோபி (23) ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும், காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, திருவலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் பலியான சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story