தொண்டி அருகே தீ விபத்து: 25–க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள் எரிந்து நாசம்


தொண்டி அருகே தீ விபத்து: 25–க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 1:17 PM GMT)

தொண்டி அருகே உள்ள சோளியக்குடி லாஞ்சியடி பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ளது சோளியக்குடி லாஞ்சியடி. இங்கு சுமார் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் அனைவரும் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் இப்பகுதியில் உள்ள கடற்கரை ஓரத்தில் இருந்த சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான குடிசையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் அந்த குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் குடிசைகளில் தூங்கிக் கொண்டிருந்த தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மேலும் தீயை அணைக்க கடுமையாக நீண்ட நேரமாக போராடியும் அணைக்க முடியவில்லை. இதனால் சிறிது நேரத்தில் அங்கிருந்த சுமார் 25–க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருவாடானை தீயணைப்பு படையினர் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த சுமார் 17 கருவாடு, இறால் கம்பெனிகளில் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

ஆவணங்கள் எரிந்து நாசம்

மேலும் சுமார் 10–க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானதில் அங்கு இருந்த ரே‌ஷன் கார்டுகள், மீனவர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களும், துணி, ரொக்கப்பணம், பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

இதுபற்றி தகவலறிந்த வருவாய்த்துறை, காவல்துறை, மீன்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இங்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக அடிக்கடி இதுபோன்ற தீ விபத்து நடந்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் சுமார் 13 குடிசைகள் தீ பிடித்து எரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story