காவேரிப்பட்டணம் அருகே வெவ்வேறு விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் சாவு


காவேரிப்பட்டணம் அருகே வெவ்வேறு விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 6 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-06T19:17:57+05:30)

காவேரிப்பட்டணம் அருகே வெவ்வேறு விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பழனி (வயது 25). இவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து போச்சம்பள்ளிக்கு பழனி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வழியில் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மஞ்சமேடு என்னும் இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற பஸ் மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பழனி பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பழனி உயிரிழந்தார்.

மற்றொருவர் சாவு

இதே போல் காவேரிப்பட்டணம் அருகே உள்ள வாடமங்கலத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (35). இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அரசம்பட்டி தென்பெண்ணை ஆறு பக்கம் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துகள் குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story