வல்லூர் ஊராட்சியில் அனுமதியின்றி உபயோகப்படுத்தப்பட்ட குடிநீர் இணைப்பு அகற்றும் பணி கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு


வல்லூர் ஊராட்சியில் அனுமதியின்றி உபயோகப்படுத்தப்பட்ட குடிநீர் இணைப்பு அகற்றும் பணி கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 7 April 2017 6:38 PM GMT (Updated: 2017-04-08T00:07:54+05:30)

வல்லூர் ஊராட்சியில் ஊராட்சி அனுமதியின்றி உபயோகப்படுத்தப்பட்ட குடிநீர் இணைப்பு

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தன்னிச்சையாக வீட்டுக்குள் குடிநீர் இணைப்புகள் எடுத்து உள்ளதை கண்டறிந்து குடிநீர் இணைப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கோட்டூர் ஒன்றியம் வல்லூர் ஊராட்சி கோவிந்தநத்தம் கிராமத்தில் ஊராட்சி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தன்னிச்சையாக பயன்படுத்தப்படும் குடிநீர் இணைப்புகள் அகற்றும் பணியினை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சட்டவிரோத 31 குடிநீர் இணைப்புகள் உள்ளதை கண்டறிந்து, உடனடியாக அந்த குடிநீர் இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

அதிகாரிகளுக்கு உத்தரவு

மேலும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கள ஆய்வு செய்து குடிநீர் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தங்கு தடையின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கலெக்டர் நிர்மல்ராஜ் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜன், வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story