அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு சித்தராமையா அறிவிப்பு


அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 10 April 2017 9:28 PM GMT (Updated: 10 April 2017 9:27 PM GMT)

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது உள்பட அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

பெங்களூரு,

மாத சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பெங்களூருவில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தினார்கள். பெங்களூரு சுதந்திர பூங்கா முன்பு சேஷாத்திரி சாலையில் அவர்கள் அமர்ந்தும், இரவு நேரங்களில் அங்கேயே படுத்து உறங்கியும் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையா 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். அது தோல்வியில் முடிந்தது.

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததால் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சித்தராமையா, 9-ந் தேதி(அதாவது நேற்று முன்தினம்) நடைபெறும் இடைத்தேர்தல் முடிந்ததும் மறுநாள் 10-ந் தேதி(அதாவது நேற்று) உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.

சித்தராமையா முன்னிலையில் பேச்சுவார்த்தை

சித்தராமையாவின் இந்த உறுதிமொழியை ஏற்று அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் 4 நாட்கள் தொடர் போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா முன்னிலையில் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி உமாஸ்ரீ, அங்கன்வாடி ஊழியர்களின் சங்க மாநில தலைவி வரலட்சுமி மற்றும் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மத்திய அரசு எவ்வளவு பங்கு வழங்குகிறது, மாநில அரசின் பங்கு எவ்வளவு என்பதை சித்தராமையா விளக்கமாக எடுத்துக் கூறினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு

கர்நாடகத்தில் அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளத்தில் ஆயிரம் ரூபாயும், உதவியாளர்களின் சம்பளத்தில் ரூ.500-ம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு போதாது என்று அவர்கள் பெங்களூருவில் போராட்டம் நடத்தினார்கள். இடைத்தேர்தலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்து இருந்தேன். அதன்படி இன்று(அதாவது நேற்று) எனது முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாயும் உதவியாளர்களுக்கு ரூ.500-ம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று நான் தெரிவித்து உள்ளேன். இதன் மூலம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் சம்பள உயர்வு கிடைக்கிறது. இனி அங்கன்வாடி ஊழியர்களின் மாதச்சம்பளம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாகவும், உதவியாளர்களின் சம்பளம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் உயருகிறது. அதாவது அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக ரூ.2 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் கிடைக்கிறது. அத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ படியையும் உயர்த்தி இருக்கிறோம்.

பாராட்டை தெரிவித்தனர்

தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த திட்டத்தை மத்திய அரசு தான் செயல்படுத்தியது. இந்த சம்பள உயர்வை சேர்த்து எங்கள் அரசு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.4,450 உயர்த்தி இருக்கிறோம். முந்தைய பா.ஜனதா அரசில் ரூ.750 மட்டுமே உயர்த்தப்பட்டது.

2015-16-ம் ஆண்டில் மத்திய அரசு தனது பங்கை 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்துவிட்டது. இதனால் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மாநில அரசு அதிக உதவி செய்கிறது. இந்த சம்பள உயர்வை அங்கன்வாடி ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். அரசுக்கு அவர்கள் தங்களின் பாராட்டை தெரிவித்தனர். வரும் ஆண்டுகளில் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கெடு விதிக்கக்கூடாது என்று அவர் களுக்கு நாங்கள் நிபந்தனை விதித்துள்ளோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

முதல்-மந்திரிக்கு நன்றி

அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில தலைவி வரலட்சுமி கூறுகையில், “எங்களின் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்-மந்திரிக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.2 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் சம்பள உயர்வு வழங்குவதாக அரசு கூறியுள்ளது. மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சம்பளத்தில் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு மாதம் ரூ.5,250 கிடைக்கும். முதல்-மந்திரியின் இந்த அறிவிப்பால் 1.25 லட்சம் அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பங்கள் பயன்பெறும்“ என்றார். 

Next Story