அரவக்குறிச்சி அருகே மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது


அரவக்குறிச்சி அருகே மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-30T02:11:26+05:30)

அரவக்குறிச்சி அருகே மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார்- மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி பகுதியில் மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரனுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் உள்பட போலீசார் அரவக்குறிச்சி அருகே உள்ள சூரிப்பட்டி- மார்க்கம்பட்டி பிரிவு சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து அவற்றை ஓட்டி வந்தவர்களை விசாரித்தனர்.

பறிமுதல்

விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிலிக்கையை சேர்ந்த மனோகரன்(வயது 54), வடிவேல்(42) என்று தெரிந்தது. மேலும் காரில் சோதனை செய்தபோது மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து 624 மதுபான பாட்டில்கள், கார் மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறும்போது, இந்த மாதத்தில் மட்டும் மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்து 710 மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 

Next Story