அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-30T02:13:15+05:30)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பஷீர், வேளாண் இணை இயக்குனர் சுசீலா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

அப்போது விவசாயிகள் பேசியதாவது:–

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வறட்சி கால நிதியுதவி அளிக்க வேண்டும். வறட்சி நிவாரணம் பெற்ற விவசாயிகளின் பட்டியலை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். நல்லம்பள்ளி வார சந்தையில் விவசாயிகளிடம் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் வரி வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

உடனடி நடவடிக்கை


கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 75 ஆயிரத்து 876 விவசாயிகளுக்கு ரூ.19 கோடியே 16 லட்சம் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் வழங்கும் கிடங்குகளின் எண்ணிக்கையை 12–ல் இருந்து 24 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 37 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவுகின்றன.

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஏரிகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். நல்லம்பள்ளி வாரசந்தையில் கால்நடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக சுங்கவரி வசூலிக்கப்படுவதாக வந்துள்ள புகார்தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். விதிமீறல் இருப்பது உறுதியானால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அவர் பேசினார்.


Related Tags :
Next Story