இந்தியாவிலேயே முதன்முறையாக புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்


இந்தியாவிலேயே முதன்முறையாக புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
x
தினத்தந்தி 2 May 2017 11:30 PM GMT (Updated: 2 May 2017 9:23 PM GMT)

இந்தியாவிலேயே முதன்முறையாக புதுவையில் கடல் நீரை, குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சிங்கப்பூர் நிறுவனத்துடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை நிலத்தடி நீரை பயன்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடல் உள்ளதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதன்மூலம் பொதுமக்களுக்கு 7 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. போதிய மழை பெய்யாததால் நீலத்தடி நீரும் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் கடல்நீரை, குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் உள்ளாட்சித்துறையை சேர்ந்த அதிகாரிகள், சிங்கப்பூர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சேதுநாதன், ரகுநாத், சக்கவர்த்தி, சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

புதுவையில் முதன்முறை

அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் பல நாடுகளில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் முதன் முறையாக புதுவையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் தொடர்பாக செயல்விளக்கம் அளித்தனர். கடல்நீரில் இருந்து 1000 லிட்டர் குடிநீராக மாற்ற எவ்வளவு செலவாகிறது என கேட்கப்பட்டு உள்ளது.

புதுவையில் கடல்நீரை, குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தினால், நிலத்தடிநீர் தேவையின் பயன்பாடு குறையும். இந்த திட்டத்தை மத்திய அரசு, பிரான்சு நாட்டு அரசு உதவியுடன் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். சிங்கப்பூர் நிறுவனம் அளிக்கும் அறிக்கையை அரசு பரிசீலிக்கும். பின்னர் பொது ஒப்பந்தம் கோரப்பட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story