மதுரவாயல் அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மதுரவாயல் அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 11:15 PM GMT (Updated: 2017-05-04T02:13:38+05:30)

மதுரவாயல் அருகே புதிதாக மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

மதுரவாயல் அடுத்த வானகரம், ராஜீவ் நகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதிதாக திறக்க உள்ள மதுக்கடைக்கு பூட்டு போட முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மதுரவாயல் போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து புதிதாக திறக்க உள்ள மதுக்கடைக்கு எதிரேயே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:–

இடித்து தள்ளுவோம்

குடியிருப்புகள் மிகுந்த இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், கம்பெனிகள் உள்ளன. இங்கு மதுக்கடை திறந்தால் பள்ளி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இரவு நேரத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாது. சிறிது தூரம் சென்றால் அங்கு மற்றொரு மதுக்கடை உள்ளது.

விவசாய நிலம், தோட்டத்துக்கு அருகில் இந்த மதுக்கடை அமைந்து உள்ளது. அருகிலேயே தரை மட்ட கிணறும் உள்ளது. குடிபோதையில் தள்ளாடியபடி வருபவர்கள் இந்த கிணற்றுக்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. குற்றச்சம்பவங்களும் அதிகரிக்க கூடும். எனவே இந்த பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது. மீறினால் கடையை இடித்து தள்ளுவோம். மேலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.


Next Story