ஜவுளிக்கடையில் ரூ.11 லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


ஜவுளிக்கடையில் ரூ.11 லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 May 2017 10:15 PM GMT (Updated: 3 May 2017 9:15 PM GMT)

மயிலாடுதுறையில் ஜவுளிக்கடையில் ரூ.11 லட்சத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை,

கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திகானூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது28). இவர், மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ரமேஷ்குமார் கடையை பூட்டிவிட்டு, கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுடன் சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்றார். பின்னர் சினிமா முடிந்தவுடன் ரமேஷ்குமார் தனது கடைக்கு வந்தார். அப்போது கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் சுவரில் உள்ள வென்டிலேட்டரில் இருந்த கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மேஜை டிராவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.11 லட்சம் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். நாகையில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் கடையின் உள்பகுதியில் சுற்றி வந்தது.

ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story