பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இரவு நேரங்களில் அறுவடை


பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இரவு நேரங்களில் அறுவடை
x
தினத்தந்தி 3 May 2017 11:30 PM GMT (Updated: 3 May 2017 10:14 PM GMT)

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் நெற்றியில் பேட்டரி லைட்டுகளை கட்டிக்கொண்டு இரவு நேரங்களில் சோளத்தட்டுகளை அறுவடை செய்கிறார்கள்.

நாமக்கல்,

வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 27–ந் தேதி அதிகபட்சமாக 105.8 டிகிரி வெயில் பதிவானது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால், சோளத்தட்டுகளை பகலில் அறுவடை செய்தால், அவை காய்ந்து விடுகின்றன. அதனை கால்நடை வளர்ப்போர் வாங்க மறுக்கின்றனர்.இரவில் அறுவடை

எனவே விவசாயிகள், கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இரவு நேரங்களில் சோளத்தட்டுகளை அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர். குறிப்பாக வெண்ணந்தூர் பகுதியில் இது போன்று இரவு நேர அறுவடை நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேட்டைகாரர்களை போன்று நெற்றியில் பேட்டரி லைட்டுகளை கட்டிக்கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு அறுவடையை தொடங்குகின்றனர். சில பகுதிகளில் பழைய டயர்களை கொளுத்தி வயலில் போட்டு விட்டு அந்த வெளிச்சத்திலும் அறுவடை செய்வதை காண முடிகிறது.

வேதனை

கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளில் தான் மின்னொளியில் பகல்–இரவு ஆட்டங்கள் நடைபெறும். ஆனால் வறட்சியின் கொடுமையால் விவசாயத்திலும் இரவு–பகல் பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.


Next Story