நிதி பற்றாக்குறையை சமாளிக்க தொடரும் நடவடிக்கை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 257 ஊழியர்கள் இடமாற்றம்


நிதி பற்றாக்குறையை சமாளிக்க தொடரும் நடவடிக்கை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 257 ஊழியர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 11 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-11T23:15:54+05:30)

நிதிபற்றாக்குறையை சமாளிக்க தொடர் நடவடிக்கையாக அண்ணாமலை பல்கலைக்கழத்தில் நேற்று 257 ஊழியர்களை இடமாற்றம்

சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. மேலும் நிதிபற்றாக்குறையால், அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் கொடுக்க முடியாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தவித்தது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்றது. தொடர்ந்து பல்கலைக்கழகத்தை கண்காணிக்கவும், நிதிபற்றாக்குறையை சமாளிக்கவும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவை தமிழக அரசு நியமனம் செய்தது. அவர் பதவி ஏற்றதும் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் நிதிபற்றாக்குறையை சமாளிக்க அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நிதிபற்றாக்குறையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஷிவ்தாஸ் மீனா அறிக்கை தாக்கல் செய்தார்.

257 ஊழியர்கள் இடமாற்றம்

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்த உதவி பேராசிரியர்கள் 369 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து 105 ஊழியர்கள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 257 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

3 ஆண்டு ஒப்பந்தம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் 5 ஆயிரத்து 500 பேர் அதிகப்படியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 2 ஆயிரத்து 500 ஊழியர்களை பணி இடமாற்றம் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை இன்று(நேற்று) முதல் நிறைவேற்ற உள்ளளோம். அதன்படி முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் 257 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் அனுப்பப்படுகிறார்கள். ஒப்பந்தம் முடிந்ததும் மீண்டும் பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய அழைக்கப்படுவார்கள்.

நிதி இழப்பு தடுப்பு

இவர்கள் தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் பணி அமர்த்தப்படுவார்கள். மீதமுள்ள ஊழியர்கள் ஒரு வாரத்தில் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதன்மூலம் மாதந்தோறும் பல்கலைக்கழகத்துக்கு 8.15 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு

பல்கலைக்கழகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக தகவல் அறிவிப்பில் நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பார்த்ததும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 60 போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவினர் பல்கலைக்கழக நுழைவு வாயிலிலும், மற்ற 2 குழுவினர் பல்கலைக்கழகம் முழுவதும் வலம் வந்தபடி உள்ளனர். இதனால் பல்கலைக்கழகம் பரபரப்பாக காணப்படுகிறது. 

Next Story