மாடு வளர்க்கும் விவசாயிகளின் தலையில் பேரிடி


மாடு வளர்க்கும் விவசாயிகளின் தலையில் பேரிடி
x
தினத்தந்தி 28 May 2017 6:04 AM GMT (Updated: 28 May 2017 6:04 AM GMT)

மிருகவதைக்கு எதிராக மத்திய அரசு அதிரடியாக கொண்டு வந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மிருகவதைக்கு எதிராக மத்திய அரசு அதிரடியாக கொண்டு வந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மிருகவதைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இந்த அறிவிப்பு நிஜமாகவே மகிழ்ச்சிக்கு உரியதா?

ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பது விவசாயிகளின் உதிரி வருவாயாக உள்ளது. ஒரு ஊரில் விவசாய பண்ணை வைத்து இருப்பவர்களைவிட பால், சாணம் போன்ற தேவைகளுக்காக சில மாடுகளை வைத்து இருப்பவர்கள்தான் அதிகம்.

நகரங்களில் கூட ஏதோ ஒரு சந்துக்குள் நுழைந்தால், கழுத்தில் எந்த கயிறும் இல்லாமல் சுவரொட்டிகளை சுவைத்தபடி செல்லும் மாடுகள், அங்கே 10 குழந்தைகளின் பால்தேவையை நிறைவேற்றும்.

ஆக, மாடு வளர்ப்பு என்பது முழுக்க இறைச்சி தேவையை நிறைவு செய்வது என்பதல்ல.

மாடு வளர்க்கும் மனிதர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் வரும்போது முதலில் கைகொடுப்பவை அவர்கள் வளர்க்கும் கால்நடைகள்தான்.

இதனால்தான் ஆட்டை விற்று, மாட்டை விற்று... என்று தங்கள் கஷ்டகாலத்தில் கடந்து வந்த பாதையை இன்னும் பலர் பேசுவதை கேட்க முடியும்.

அப்படி கால்நடைகளை விற்க செல்லும்போது அவற்றை வாங்குபவர் எதற்காக வாங்குவார் என்று பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பாசமாக வளர்த்த மாட்டினை பிரியும் நேரத்தில் கண்ணீர் துளிகளை மாடுகளுக்கு தெரியாமல் துடைத்துக்கொள்ளும் விவசாயிகளையும், வளர்த்தவர் கண் மறைவதுவரை இமைக்காமல் அடம்பிடிக்கும் மாடுகளையும் அன்றாடம் சந்தைகளில் பார்க்கும்போது ஈரம் இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்கும்.

ஆனால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே? குடும்பத்தில் ஒருவராக வளர்ந்த மாடுகள் அந்த தியாகத்தை செய்கின்றன.

ஆனால் இனி அது சாத்தியமா?

ஈரோடு கருங்கல்பாளையம் வாராந்திர மாட்டுச்சந்தை மேலாளரும், ஈரோடு மாவட்ட கறவை மாடு வியாபாரிகள் சங்கத்தின் செயலாளருமான முருகனிடம் பேசியபோது, அவர் கூறியதாவது-

ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம், அந்தியூர், மொடச்சூர், புஞ்சைபுளியம்பட்டி, சிவகிரி ஆகிய 5 இடங்களில் வாராந்திர மாட்டுச்சந்தை கூடுகிறது. அருகில் பொள்ளாச்சி, திருப்பூர், குண்டடம், மூலனூர், பழனி பகுதிகளிலும் மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைகளுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், திண்டுக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகிறார்கள். மராட்டியம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வருகிறார்கள்.

காரணம், இந்த சந்தைகளில் கறவை மாடுகள் அதிகம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கறவை மாடுகள், கன்று ஈனும் நிலையில் உள்ள பசுக்கள் அதிகம் வருவதால் மாடுகள் வளர்ப்பவர்கள் அதிக அளவில் வந்து வாங்கிச்செல்கிறார்கள்.

20 சதவீதம் அளவுக்கு காளைக்கன்றுகளும், அடிமாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பொதுவாக கேரளாவில் இருந்து வந்து, தமிழகத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளும் அதிக அளவில் வந்து மாடுகளை வாங்கிச்செல்வார்கள்.

இதனால் விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்த்துவரும் வயதான மாடுகளை நல்ல விலைக்கு விற்பனை செய்து வந்தனர். ஒரு ஆண்டுக்கு மேல் வளர்க்க முடியாத காளைக்கன்றுகளையும் விற்பனை செய்து வந்தனர்.

இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய வருவாயாக இருந்தது.

ஒரு பசு 5 அல்லது 6 கன்றுகள் ஈன்ற பின்னர் அது பயனற்றதாக மாறிவிடும். எனவே அதை வைத்து யாரும் வளர்த்து செலவு செய்ய விரும்ப மாட்டார்கள். காளைக்கன்றுகளையும் ஒரு ஆண்டுக்கு மேல் வளர்க்க முடியாது.

அவற்றை விற்கும்போது அவர்களுக்கு ஒரு வருவாய் கிடைக்கும். இந்த வருவாய் தங்கள் குடும்பத்துக்கும், மாடுகளின் தீவனத்துக்கும்தான் ஆகும்.

இது விவசாயிகளோ, வியாபாரிகளோ கொடூர மனதுடன் செய்வது இல்லை. கால்நடை வளர்ப்பு தொழிலில் இது ஒரு பகுதி. பல விவசாயிகள் கோடை வறட்சியையும், விளைபொருளுக்கு உரிய விலை இல்லாத நிலையையும் தாங்கள் வளர்க்கும் மாடுகளை விற்றே சமாளித்து வருகிறார்கள்.

கறவை மாடுகளை விற்பனை செய்ய ஏற்கனவே சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் தற்போது விதிக்கப்பட்டு உள்ள கடுமையான நடைமுறையாலும், இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யக்கூடாது என்கிற அறிவிப்பாலும் பல சிக்கல்கள் வரும். வியாபாரிகள் வருகை குறையும். இதனால் கறவை மாடுகள் விற்பனையும் குறையும். மாடுகளின் விலையும் குறையும். விவசாயிகளுக்கு வருவாய் குறையும். சந்தைகளில் சுமார் 50 சதவீதம் வரை விற்பனை பாதிப்பு ஏற்படும்.

விற்க முடியாத மாடுகளை விவசாயிகள் தங்கள் வீடுகளில் வைத்து வளர்க்கவேண்டிய கட்டாயம் வரும். அவற்றுக்கு தீவனம் போட சிரமம். காளைக்கன்றுகளை வீட்டில் வைத்து வளர்ப்பதும் சிரமம். இதனால் மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் குறையும்.

மொத்தத்தில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மாடு வளர்க்கும் விவசாயிகளின் தலையில் இறங்கிய பேரிடி ஆகும்.

எனவே விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பு இல்லாத ஒரு நிலையை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்கத்தின் மாவட்ட தலைவர் மொடக்குறிச்சி கண்ணுசாமியும் இவரது கருத்தை ஆமோதித்தார்.

-நாஞ்சில் ஜெபக்குமார். 

Next Story