திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பாத்திர தொழிலாளர்கள் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பாத்திர தொழிலாளர்கள் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
x
தினத்தந்தி 30 May 2017 10:15 PM GMT (Updated: 2017-05-31T01:07:49+05:30)

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பாத்திர தொழிலாளர்கள் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது.

திருப்பூர்

திருப்பூர் அருகே உள்ள அனுப்பர்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பாத்திர உற்பத்தி பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டறைகளில் எவர்சில்வர், பித்தளை, செம்பு உள்ளிட்ட பாத்திர வகைகள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. பழைய சம்பள கால நிர்ணயம் முடிவுற்ற நிலையில் பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களுக்கும், பாத்திர உற்பத்தியாளர்களுக்கும் இடையே பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பாத்திர உற்பத்தியாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாததால் பாத்திர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் தோல்வி

இந்த நிலையில் தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரி பிரேமா முன்னிலையில் தொழிற்சங்கங்கள், பாத்திர உற்பத்தியாளர்கள் இடையே 5–ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. ஆனால் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாததால், பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற (ஜூன்) 9–ந் தேதி மீண்டும் நடைபெற உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். அத்துடன் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தையில் ஏ.டி.சி.யை சேர்ந்த விஜயகுமார், எல்.சி.எப்.யை சேர்ந்த வேலுச்சாமி, எச்.எம்.எஸ். திருஞானம், ஐ.என்.டி.யு.சி. ஈஸ்வரன், சி.ஐ.டி.யு. ரங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story