ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் ஓட்டல்–பேக்கரிகள் அடைப்பு பொதுமக்கள் அவதி


ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் ஓட்டல்–பேக்கரிகள் அடைப்பு பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 30 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-31T01:18:53+05:30)

ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் ஓட்டல்–பேக்கரிகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஈரோடு,

ஓட்டல்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி ரூ.50 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு 0.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு 2 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியை 12 சதவீதமாகவும், குளிர்சாதன வசதி கொண்ட ஓட்டல்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் வரி உயர்த்தப்பட உள்ளது.

இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தென்மாநில ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடைகள் அடைப்பு

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. ஈரோடு சூரம்பட்டி, மேட்டூர்ரோடு, பெருந்துறைரோடு, மணிக்கூண்டு, பிரப்ரோடு, காந்திஜிரோடு, கொல்லம்பாளையம், பன்னீர்செல்வம் பூங்கா, கருங்கல்பாளையம் உள்பட அனைத்து இடங்களிலும் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பஸ் நிலையம், ரெயில் நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல்களும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதேபோல் வெளியூர்களுக்கு சென்று வருபவர்களும் சிரமப்பட்டார்கள். சாலையோரக்கடைகளும், ஒருசில சிறிய ஓட்டல்களும் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. எனவே பொதுமக்கள் சிறிய ஓட்டல்களுக்கு படைஎடுக்க தொடங்கினர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

அந்தியூர்

ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் உறவினர்கள், அவசரமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள், வழக்கமாக ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் உள்ளிட்டோரும் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இதேபோல் அந்தியூரில் 50 ஓட்டல்களும், நம்பியூரில் 20 ஓட்டல்களும் 25 பேக்கரிகளும், தாளவாடியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் 46–ம் என மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டன. கோபி பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களும், பேக்கரிகளும் அடைக்கப்பட்டன. இதனால் கோபி அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு வழக்கமான நேரத்தை விட சீக்கிரமே உணவு விற்றுத்தீர்ந்தது.

10 ஆயிரம் ஓட்டல்–பேக்கரிகள்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் தங்கவேலு கூறும்போது, ‘‘சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மூலம் உணவு பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள வரியை ஓட்டல் நிர்வாகத்தினர் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது வரி அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உணவு பொருட்களின் விலை உயரும். எனவே வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் ஓட்டல்–பேக்கரிகள் அடைக்கப்பட்டன’’, என்றார்.


Next Story