எண்ணூரில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம்


எண்ணூரில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 30 May 2017 10:30 PM GMT (Updated: 30 May 2017 9:17 PM GMT)

எண்ணூரில் புதிதாக அனல் மின்நிலையம் அமைக்க நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையம் 1970–ம் ஆண்டு 450 மெகாவாட் மின் உற்பத்தியை தொடங்கி கடந்த 47 ஆண்டுகளாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கி வந்தது. இங்கு மின் உற்பத்தி செய்யப்படும் அலகுகள் பழுதானதால் அதே பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் புதிதாக 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மீனவர் சங்க அமைப்பினர், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுள் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

அனல் மின்நிலையம் தொடங்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறையும். கடல் வளம் பாதிக்கப்பட்டு உள்ளதால் மீன்பிடிக்க முடியாத நிலை உள்ளது. நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

எனவே குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மீனவர்களுக்கு தொழில் செய்ய வழிவகை செய்து கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இறுதியில் கலெக்டர் பேசுகையில், அனல் மின் நிலையம் அமைவதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார்.


Next Story