பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு சாலையின் குறுக்கே மரம் சாய்ந்தது


பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு சாலையின் குறுக்கே மரம் சாய்ந்தது
x
தினத்தந்தி 30 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-31T03:34:03+05:30)

குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்தது.

நாகர்கோவில்,

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி இருக்கிறது. எனவே தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குமரி, நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவ மழை பெய்யும்.

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.  

மரம் சாய்ந்து மின்கம்பம் சேதம்

நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவிலில் பெய்த பலத்த மழையால் ஒழுகினசேரி பகுதியில் ஒரு தென்னை மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பமும் சாய்ந்தது.

தென்னை மரம், சாலையின் குறுக்கே கிடந்ததால் ரோட்டின் குறுக்கே ஏதோ ஒரு தடுப்பு ஏற்படுத்தி இருப்பது போன்று காட்சி அளித்தது. தென்னை மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலையின் குறுக்கே விழுந்த மரம் அகற்றப்படாததால் அந்த வழியாக பெரிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றன. மேலும் மின்கம்பிகள் அறுந்து கிடந்ததால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை நீடித்தது.

நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்கம்பிகளை சரிசெய்து, மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை அகற்றும் பணியும் நடந்தது.

கொல்லங்கோடு

கொல்லங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று கொல்லங்கோடு, நீரோடி, மார்த்தாண்டன்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்த வண்ணமாக இருந்தது. நாகர்கோவிலிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மழை பெய்யவில்லை. ஆனால், வெயிலின் தாக்கம் இல்லை. குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் நிலவியது.

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:–

அணைப்பகுதிகள்

பேச்சிப்பாறை அணை–25, பெருஞ்சாணி 27.2, சிற்றார் 1– 16.8, சிற்றார் 2– 26.6, பொய்கை–2.2, மாம்பழத்துறையாறு–56

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–

நிலப்பாறை–29, இரணியல்–48.4, குளச்சல்–54.4, அடையாமடை–40, கோழிப்போர்விளை–37.6, முள்ளங்கினாவிளை–22, திற்பரப்பு–29.2, நாகர்கோவில்–39, பூதப்பாண்டி–13.8, சுருளோடு–33.4, கன்னிமார்–13.2, ஆரல்வாய்மொழி–2.2, பாலமோர்–19.4, மயிலாடி–49, கொட்டாரம்–31.

நீர்வரத்து அதிகரிப்பு

மழை காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 52 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 86 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

நேற்று முன்தினம் 10 கனஅடி வீதம் தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு தற்போது 66 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதுபோல சிற்றார்–1 அணைக்கு 8 கன அடி வீதமும், சிற்றார்–2 அணைக்கு 10 கன அடி வீதமும், மாம்பழத்துறையாறு அணைக்கு 3 கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 66 கனஅடி தண்ணீரும், சிற்றார்–2 அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story