காவல் பணியில் ரோபோக்கள்


காவல் பணியில் ரோபோக்கள்
x
தினத்தந்தி 31 May 2017 7:24 AM GMT (Updated: 31 May 2017 7:24 AM GMT)

மனிதர்கள் செய்ய முடியாத வேலைகளை எல்லாம் ரோபோக்களின் உதவியால் சாதித்துக் கொள்ளும் காலம் இது.

னிதர்கள் செய்ய முடியாத வேலைகளை எல்லாம் ரோபோக்களின் உதவியால் சாதித்துக் கொள்ளும் காலம் இது. தொழிற்சாலைகளில் எந்திரங்கள் வேலை செய்வது போலவே, இன்னும் சிறிது காலத்தில் மனித வடிவ ரோபோக்களே பெரும்பாலான வேலைகளை செய்ய உள்ளன. உதாரணமாக ஓட்டலுக்கு வருபவர்களை வரவேற்க ரோபோ வந்துவிட்டது. இதுபோல மருத்துவ உதவியாளர் ரோபோ, ஆசிரியர் ரோபோ என பலவித ரோபோக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சட்ட ஒழுங்கு மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பணிகளை ரோபோக்களிடம் ஒப்படைப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது. ரோபோக்களுக்கு தண்டிக்கும் அதிகாரம் அளித்தால் மனிதர்களால் அவற்றிடம் இருந்து அவ்வளவு எளிதில் தப்ப முடியாது என்பதே அதற்கு காரணம். இருந்தாலும் ஆயுதப் பிரயோகம் இல்லாத கண்காணிப்பு பணிகளுக்கு ரோபோக்களை பயன்படுத்தலாம் என்பதால் காவல்துறையிலும் ரோபோக்களின் பயன்பாடு பெருகி வருகிறது.

அதற்கு முன்னோடியாக சில நாடுகளில் குறிப்பிடத்தக்க காவல் பணிகளை ரோபோக்கள் கவனிப்பதை தெரிந்து கொள்ளலாம். சீனாவிலும், துபாயிலும் பல்வேறு சட்டம் ஒழுங்கு தொடர்பான பணிகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரும்பாலும் பொதுவான தகவல்களை சேகரிப்பது மற்றும் பரிமாற்றம் செய்வதில் அவர்கள் ரோபோக்களை ஈடுபடுத்தி வருகிறார்கள்.

சீனாவில் ‘அன்பாட்’ எனப்படும் ரோபோக்கள் ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் காவல் பணியில் ஈடுபடுகின்றன. இவை குற்றவாளிகள் ஊடுருவலை கண்காணிக்கிறது. முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் ரோபோவுக்கு செயற்கை அறிவு நுட்பத்தில் வழங்கப்பட்டிருப்பதால், மனித காவலர்களைவிட துல்லியமாக மாறுவேடத்தில் திரியும் குற்றவாளிகளைக்கூட எளிதாக அடையாளம் கண்டுவிடுகின்றன இந்த ரோபோக்கள்.

துபாயில் பல்வேறு பணியில் ரோபோ போலீசை பயன்படுத்துகிறார்கள். 2020-ல் நிறைய ரோபோக்களை காவல் பணியில் ஈடுபடுத்தவும், 2030-ல் காவலர்களே இல்லாத ரோபோ காவல்நிலையத்தை உருவாக்கும் இலக்குடனும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

காங்கோவில் 2 வருடங்களாக போக்குவரத்து காவல் பணியில் மனித வடிவ ரோபோவை பயன்படுத்துகிறார்கள். கேமரா கண்களால் விதிமீறுபவர்களை கண்காணிக்கும் இந்த ரோபோ, தவறு செய்பவர்களை அதிக கவனத்துடன் உற்றுக் கவனித்து, அவர்களைப் பற்றிய தகவலை உடனே காவல்நிலையத்திற்கு அனுப்பிவிடுகிறது. இதனால் விதிமீறி செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கின்றன ரோபோக்கள்!


Next Story