பக்கவாத நோயாளிகளுக்கு உதவும் கருவி


பக்கவாத நோயாளிகளுக்கு உதவும் கருவி
x
தினத்தந்தி 31 May 2017 8:15 AM GMT (Updated: 2017-05-31T13:45:10+05:30)

‘ஊனம் என்பது உடலில் இல்லை. மனதில்தான் இருக்கிறது’ என்பதை நிரூபிக்கும் விதமாகவே இருக்கிறது ‘சைபத்லான்’ என்று அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச போட்டி.

‘ஊனம் என்பது உடலில் இல்லை. மனதில்தான் இருக்கிறது’ என்பதை நிரூபிக்கும் விதமாகவே இருக்கிறது ‘சைபத்லான்’ என்று அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச போட்டி.

பல்வேறு வகையான திறன் சார்ந்த குறைபாடுகள் கொண்ட மனிதர்களுக்கு அன்றாடம் உதவக்கூடிய ரோபாட் கருவிகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்ட, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சர்வதேச போட்டியே ‘சைபத்லான்’ என்று அழைக்கப்படுகிறது.

விபத்து அல்லது குறிப்பிட்ட நோய்கள் காரணமாக கை, கால் செயலிழந்து போனால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் நிலவிய காலம் மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது, ரோபாட்டிக் துறையின் அதீத வளர்ச்சியின் பலனாக, உடலின் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் செயலிழக்கச் செய்துவிடும் பகுதி பக்கவாதம் ( Partial Paralysis ) முதல் உடல் மொத்தத்தையும் செயலிழக்கச் செய்துவிடும் முழுமையான பக்கவாதம் (
Total Paralysis
) வரை பல்வேறு வகையான உடல் ரீதியிலான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக்கூடிய அதிநவீன ரோபாட்டிக் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

உதாரணமாக, செயற்கை உறுப்புகள் ( Prostheses ) அல்லது புறவன்கூடுகள் ( Exoskeletons ) என்று அழைக்கப்படும் ரோபாட்டிக் கருவிகள், மிகவும் மோசமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் செயற்கை உறுப்புகள் பொருத்திக்கொண்டவர்களுக்கு என பிரத்தியேகமாக நடத்தப்படும் பயானிக் ஒலிம்பிக்ஸ் ( Bionic Olympics ) போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக் கூடிய புறவன்கூடுகளைப் பொறுத்தவரை தற்போது பயன்பாட்டில் இருக்கும் புறவன்கூடு களை பலமடங்கு மேம்படுத்திட முடியும் என்று களத்தில் இறங்கி அதில் வெற்றியும் பெற்று அசத்தியிருக்கிறது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஆக்ஸ்லி தலைமையிலான ரோபாட்டிக் ஆய்வாளர்கள்.

மனித மூளையை மட்டும் பயன்படுத்தி புறவன்கூடுகளை கட்டுப் படுத்த மற்றும் இயக்கக்கூடிய ஒரு அட்டகாசமான கருவியை கண்டுபிடித்துள்ளனர் தாமஸ் ஆக்ஸ்லியின் ஆய்வுக்குழுவினர். அதாவது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் நகர வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதும். உடனே அவர் அணிந்துள்ள புறவன்கூடு அவர் விருப்பப்படி நகரும் மற்றும் சொன்னால் சொன்னபடி எல்லாம் கேட்கும்.

மின் முனைகளால் சூழப்பட்ட, உலோகத்தால் ஆன குழல் ( Metallic stent ) போன்ற அமைப்பு கொண்ட, ‘ஸ்டென்ட்ரோட்’ ( Stentrode ) என்று அழைக்கப்படும் இந்த புதிய கருவியானது, கழுத்துப் பகுதியில் இருக்கக் கூடிய கழுத்துப் பெருஞ்சிரைக்குள் ( jugularvein ) அறுவை சிகிச்சை மூலம் முதலில் உள்ளே நுழைக்கப்படுகிறது.

பின்னர் மூளைக்குள் இருக்கும் ஒரு ரத்த நாளம் வரை செலுத்தப்பட்டு, அந்த ரத்த நாளச் சுவற்றை சுற்றியுள்ள மூளை உயிரணுக்களில் உள்ள மின் சமிக்ஞைகளை கணக்கிடுகிறது. மிகவும் முக்கியமாக, கடந்த ஆண்டு இந்த கருவியானது செம்மறி ஆடுகளின் மூளைக்குள் பொருத்தி பரிசோதிக்கப்பட்டது.

சுமார் ஆறு மாதங்கள் தொடர்ந்த அந்த ஆய்வில், பிற மூளை உட்பொருத்திகள் போல அல்லாமல், ஸ்டென்ட்ரோட் கருவியானது செம்மறி ஆடுகளின் மூளையில் திசுக்காயம் அல்லது வடுக்களை ஏற்படுத்தும் மூளைக் காயங்களை ஏற்படுத்தவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது.

வருகிற 2018-ம் ஆண்டில், மூளைத் தண்டுவட பாதிப்புகள், ஸ்ட்ரோக், மோட்டார் நியூரான் நோய் அல்லது தசைவளக்கேடு நோய் போன்ற நோய்களால் ஏற்படும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 5 நோயாளிகள் மீது ஸ்டென்ட்ரோட் கருவியை பரிசோதிக்க ஆயத்தமாகி வருகிறது தாமஸ் ஆக்ஸ்லியின் ஆய்வுக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஸ்டென்ட்ரோட் கருவியானது மனிதர்களுக்கு எவ்வளவு பலனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Next Story