கோவை அரசு பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிய பாடப்பிரிவு


கோவை அரசு பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிய பாடப்பிரிவு
x
தினத்தந்தி 9 Jun 2017 4:45 AM IST (Updated: 9 Jun 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவியின் நலனுக்காக புதிய பாடப்பிரிவு தொடங்கப்பட்டது.

கோவை,

கோவை சீரநாயக்கன்பாளையம் அண்ணாவீதியை சேர்ந்தவர் சிட்டிபாபு. வீடு, வீடாக பத்திரிகை போடும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது16). மாற்றுத்திறனாளி மாணவி. குழந்தையாக இருந்தபோது எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, உடல் வளர்ச்சியும் குன்றியது. இதனால் பிரீத்தியால் நடக்க முடியாது. எங்கு சென்றாலும் தாய் புவனேஸ்வரி தான் தூக்கிச்செல்வார். கல்வியில் மிகுந்த ஆர்வமுள்ள பிரீத்தி, கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சா.பூ.வி.அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 468 மதிப்பெண் பெற்றார்.

பிளஸ்-1 வகுப்பில் சேரும்போது, மாணவி தனது உடல்நிலையை கருதி செய்முறை வகுப்பு இல்லாத வணிகவியல்(காமர்ஸ்) பாடப்பிரிவை படிக்க விரும்பினார். ஆனால் இந்த பள்ளியில் வணிகவியல் பாடம் இல்லாததால் இதே பள்ளியில் கல்வியை தொடர இயலாத நிலை உருவானது.

கல்வி அதிகாரிகள் ஏற்பாடு

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வி.சரவணன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ் மூர்த்திக்கு தெரிவித்தார். தங்களது பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவு தொடங்கப்படவில்லை என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து மாற்று திறனாளியின் மாணவியின் நலனை கருத்தில்கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதே பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவை தொடங்குவதற்கான அனுமதியை அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முதல் மாணவி பிரீத்தி, சக மாணவிகளுடன் பிளஸ்-1 வகுப்பு படிக்க தொடங்கியுள்ளார்.

மாணவிக்காக சிறப்பு வசதி

மாணவி பிரீத்தியினால் எழுந்து உட்கார முடியாது. இதனால் மாணவிக்காக தனி மேஜை போடப்பட்டு அதில் படுத்த நிலையில் உட்கார்ந்து சக மாணவிகளுடன் பாடத்தை கவனிக்கிறார். இதுகுறித்து மாணவி பிரீத்தி கூறியதாவது:-

உயர் கல்வி கற்று கலெக்டர் ஆகி பொதுமக்களுக்குசேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்காக முதல்கட்டமாக விரும்பிய பாடப்பிரிவை வழங்கிய கல்வி அதிகாரிகள், இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மாணவி கூறினார்.

மாணவியின் தாய் புவனேஸ்வரி கூறும்போது, ‘நாங்கள் ஏழைகள். மாற்று திறனாளியாக இருந்தாலும் எனது குழந்தை கல்வி கற்க வேண்டும் என்பதில் ஆரம்பம் முதல் உறுதியாக இருக்கிறேன். இதற்காக நானும், எனது கணவரும் ஊக்கம் அளித்து வருகிறோம். மகளின் நிலையை கருதி இதே பள்ளியில் எனக்கு கூலி வேலைக்கான வாய்ப்புகளையும் தலைமை ஆசிரியர் வழங்கியுள்ளார்‘ என்று தெரிவித்தார்.

50 ஆண்டு பள்ளி

பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் கூறியதாவது:- மாணவி பிரீத்தி பாடங்களை எளிதில் புரிந்து மனப்பாடமாக கூறுவாள். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் இந்த பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேராமல் கல்வியை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கல்லூரியில் சேர்த்து முதலாம் ஆண்டு கட்டணம் செலுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதற்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் உதவியுள்ளனர். இந்த பள்ளியின் 50-ம் ஆண்டு விழா வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் மாற்று திறனாளி மாணவிக்கு புதிய பாடப்பிரிவு தொடங்க அனுமதி அளித்த கல்வி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story