மின்சாரம் தாக்கி அண்ணன்-தங்கை பலி: ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க கோரி கோவை அரசு ஆஸ்பத்திரி முற்றுகை


மின்சாரம் தாக்கி அண்ணன்-தங்கை பலி: ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க கோரி கோவை அரசு ஆஸ்பத்திரி முற்றுகை
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி இறந்த அண்ணன்-தங்கை குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை உக்கடம் மஜீத்காலனியை சேர்ந்த சுலைமானின் மகன் சல்மான்(வயது18), மகள் சாய்ரா பானு(16) ஆகியோர், வீட்டுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரத்தில் அள்ளி வெளியே ஊற்றினர்.அப்போது வீட்டு முன் இருந்த இரும்பு கம்பத்தை தொட்டபோது, மின்சாரம் தாக்கி சல்மான் அலறிதுடித்தார்.

அவரை காப்பாற்ற சென்ற தங்கை சாய்ரா பானு மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.
இதுகுறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி முஸ்தபா(35) என்பவர் மின் இணைப்பை முறைகேடாக இரும்பு மின்கம்பம் மீது கொடுத்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முஸ்தபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசு ஆஸ்பத்திரியில் முற்றுகை

சல்மான், சாய்ராபானு ஆகியோரின் உடல்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இருவரின் உடல்களையும் பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உறவினர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டு முற்றுகை யிட்டனர்.

பலியான இருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவித்தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும், அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என்றும் கோஷமிட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கோட்டாட்சியர் சின்னசாமி, வடக்கு தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அரசு நிவாரண தொகையை விரைந்து பெற்று தர ஏற்பாடு செய்யப்படும் என்று கோட்டாட்சியர் சின்னசாமி உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் வாங்கிச்சென்றனர்.


Next Story