ஊட்டியில் 2 மாதங்கள் நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு


ஊட்டியில் 2 மாதங்கள் நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு
x
தினத்தந்தி 16 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-17T01:37:27+05:30)

ஊட்டியில் 2 மாதங்கள் நடைபெற்ற குதிரை பந்தயம் நேற்றுடன் நிறைவடைந்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் இருந்தே ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக ஊட்டியில் நடைபெறும் குதிரை பந்தயம் மிகவும் புகழ் பெற்றதாகும். இதையொட்டி ஆண்டுதோறும் கோடை சீசனில் ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 14–ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று குதிரை பந்தயம் தொடங்கியது.

இந்த குதிரை பந்தயத்தில் சென்னை, பெங்களூரு, மும்பை, கல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400–க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. இதில் ஜாக்கிகள் மற்றும் குதிரை பயிற்சியாளர்களும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து ஊட்டியில் நடைபெற்ற குதிரை பந்தயங்கள் அனைத்தும் சென்னை, மைசூர், பெங்களூரு, டெல்லி, புனே, கல்கத்தா, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குதிரை பந்தய மைதானங்களில் உள்ள திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

சுற்றுலா பயணிகள்

கடந்த ஏப்ரல் மாதம் 29–ந் தேதி நீலகிரி 1000 கின்னிஸ் பந்தயமும், மே 6–ந் தேதி நீலகிரி 2000 கின்னிஸ் பந்தயமும், மே 13–ந் தேதி நீலகிரி டெர்பி பந்தயமும், ஜூன் 1–ந் தேதி நீலகிரி தங்க கோப்பை பந்தயமும் நடைபெற்றது. கோடை சீசனையொட்டி நடைபெற்ற குதிரை பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய குதிரைகளை பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளிளும் கண்டு ரசித்தனர். மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு, குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததை காண முடிந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 14–ந் தேதி தொடங்கி 2 மாதங்களாக நடைபெற்று வந்த குதிரை பந்தயம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து குதிரை பந்தயத்தில் பங்கேற்க வந்த குதிரைகள் அனைத்தையும் அதன் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குதிரை பந்தயத்திற்காக அமைக்கப்பட்ட கொட்டகைகளும் அகற்றப்பட்டு வருகிறது.


Next Story